வாஷிங்டன் போஸ்ட் (Washington Post) பத்திரிக்கையில், பீட்டர் தையிலே (Peter Thiele) மற்றும் பிற தொழில்நுட்ப வல்லுநர்கள் மனித வாழ்வை காலவரையின்றி நீடிக்கச் செய்யும் முயற்சிகளைக் குறித்து, “தொழில்நுட்ப ஜாம்பவான்களின் சமீபத்திய திட்டப்பணி: மரணத்தை மீறிடு” என்ற தலைப்பில் ஆரியானா சா (Ariana Cha) ஒரு கட்டுரை எழுதியிருந்தார். இந்த திட்டப்பணிக்காக பல கோடிகளைச் செலவழிக்க அவர்கள் தயாராக இருந்தனர்.
ஆனால், அவர்கள் சற்று காலதாமதமாக வந்து விட்டனர். ஏனென்றால் மரணம் ஏற்கனவே தோற்கடிக்கப்பட்டுவிட்டது. “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்,” என்று இயேசு கூறியுள்ளார் (யோவா. 11:25-26). தன் மீது விசுவாசம் வைக்கிற எவனும் ஒருபோதும், எச்சூழ்நிலைமையிலும் சாகவே சாவதில்லை என்று இயேசு உறுதியளிக்கிறார்.
ஆனால் ஒன்றை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அதாவது நம்முடைய சரீரங்கள் மரித்துப்போகும். அதைக்குறித்து நாம் ஒன்றும் செய்ய இயலாது. ஆனால் “நான்” என்று நாம் கூறும் நம்முடைய சுயம், அதாவது சிந்தித்தல், பகுத்தறிதல், நினைவுகூறுதல், நேசித்தல் போன்ற சாகச பகுதி ஒருபோதும் சாகவே சாவதில்லை.
மேலும் இதன் சிறப்பு என்னவெனில், இது நமக்கு இலவசமாகக் கொடுக்கப்படுகிற ஒரு ஈவு. நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று, இயேசு நமக்களிக்கும் இரட்சிப்பை நாம் பெறுவதே. இவ்வன்பளிப்பைக் குறித்து ஆழ்ந்து சிந்திக்கும்பொழுது, இவ்வளவு பெரிய காரியத்திற்கு இவ்வளவு எளிமையானதொரு பதிலா என்கிற உணர்வு ஏற்படுகிறது என்று சி. எஸ். லூயிஸ் தெரிவிக்கிறார். ஆகவே அதை “இருட்டில் ஒரு நமுட்டுச்சிரிப்பு” போல என விவரிக்கிறார்.
சிலர் இதைக்குறித்து, “இது மிகவும் எளிமையாக உள்ளதே,” என்கின்றனர். நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன், நீங்கள் பிறப்பதற்கு முன்பே தேவன் உங்களை நேசித்து நீங்கள் என்றென்றும் அவரோடே வாழ வேண்டும் என்று அவர் விரும்பும்பொழுது, எதற்காக அவ்வழியை கடினமாக அமைத்திடுவார்?
கிறிஸ்துவானவர் மரணத்தின் இருண்ட வாசலை அகற்றிவிட்டு அவ்விடத்திலே பிரகாசமான ஜீவ வாசலை வைத்துள்ளார்.