Archives: ஜனவரி 2017

எப்பொழுது என நினைவுகூரு

எங்கள் மகன் போதை பழக்கத்திலிருந்து விடுபட முடியாமல் போராடிக்கொண்டிருந்த ஏழு ஆண்டுகளும், நானும் என்னுடைய மனைவியும் அநேக கடினமான நாட்களை அனுபவித்தோம். எங்கள் மகனுடைய பரிபூரண விடுதலைக்காக ஜெபித்து காத்திருந்த பொழுது, சின்னஞ்சிறு வெற்றிகளை கொண்டாடக் கற்றுக்கொண்டோம். தொடர்ந்து இருபத்தி நான்கு மணி நேரம் எவ்வித மோசமான சம்பவமும் நிகழவில்லை என்றால், நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்து, “இன்றைய நாள் நன்றாகவே இருந்தது,” எனக் கூறிக் கொள்வோம். சின்ன காரியங்களிலும் வெளிப்படும் தேவனுடைய உதவியை எண்ணி நன்றிகூற நினைப்பூட்டும் வாக்கியமாக அது மாறியது.

ஆனால், இதைக்காட்டிலும் ஒரு சிறந்த வாக்கியம், “கர்த்தர் நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்; இதினிமித்தம் நாம் மகிழ்ந்திருக்கிறோம்” சங்கீதம் 126:3ல் புதைந்துள்ளது. இது தேவனுடைய கனிவான இரக்கங்களையும், அதினால் தேவன் நமக்கு பாராட்டின இரக்கத்தை நினைவூட்டி அதை நம் இருதயத்திலே பதிய வைக்க சிறந்த வசனம். நாம் எதிர்கொள்ளும் அன்றாட வாழ்வின் துயரங்கள், எவ்விளைவை உண்டாக்கினாலும், ஏற்கனவே தேவன் வெளிப்படுத்திய அன்பு, “அவர் கிருபை என்றுமுள்ளது,” (சங். 136:1) என்கிற சத்தியத்தை பறைசாற்றுகிறது.

நாம் ஒரு கடினமான சூழ்நிலையை கடந்து வந்து, தேவன் உண்மையுள்ளவர் என்பதை அறிந்து, அதனை மனதிலே பதிய வைத்துக் கொண்டால், ஒருவேளை மறுபடியும் அதே பாதையைக் கடக்க நேர்ந்தால், அவ்வெளிப்பாடு நமக்கு பெலனளிக்கும். நம்முடைய சூழ்நிலைகளைக் கடந்து வர தேவன் எவ்வாறு உதவி செய்வார் என்பதை நாம் அறியாமலிருக்கலாம், ஆனால் கடந்த காலத்தில் அவர் நமக்கு பாராட்டின இரக்கம், அவர் நிச்சயமாக இப்பொழுதும் உதவி செய்திடுவார் என விசுவாசிக்க உதவிடும்.

எதுவும் மறைவாக இல்லை

2015ஆம் ஆண்டு, ஒரு சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம், உலகெங்கும் 24 கோடியே 50 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும், அவை ஒவ்வொரு ஆண்டும் 15 சதவீத விகிதத்தில் பெருகுவதாகவும் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமன்றி ஒவ்வொரு நாளும் ஸ்மார்ட் போன்கள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முதல் வங்கிக் கொள்ளை வரை படம்பிடிக்கின்றன. பெருகி வரும் பாதுகாப்பை பாராட்டினாலும் சரி அல்லது குறைந்து வரும் அந்தரங்க எல்லையை கண்டனம் தெரிவித்தாலும் சரி, உண்மை என்னவெனில் எங்கும் கேமராக்கள் நிறைந்த சமுகத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஆனால், தேவனோடு உள்ள நம்முடைய உறவிலே, கண்காணிப்பு கேமராக்களின்
கண்காணிப்பைக் காட்டிலும் அதிக அளவு வெளியரங்கமான செயல்பாட்டையும், பொறுப்பான நடத்தையையும் நாம் அனுபவிப்பதாக புதிய ஏற்பாட்டு புத்தகமாகிய எபிரெயர் நிருபம் கூறுகிறது. “தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்குமுன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்” (எபி. 4:12-13).

நம்முடைய இரட்சகராகிய இயேசு நம்முடைய பெலவீனங்களையும், சோதனைகளையும் அவர் அனுபவித்தும் பாவம் செய்யாதிருந்ததால், “நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்” (வச. 16). நாம் அவரைக் கண்டு பயப்படாமல், அவரண்டை கிட்டிச்சேரும் பொழுது கிருபை பெறுவோம் என்ற நிச்சயம் கொள்வோமாக.

இணைந்து பணியாற்றுதல்

என் மனைவி அற்புதமான கறிக் குழம்பு செய்வாள். சிறிது கறியோடு, தேவைக்கேற்ற நறுக்கிய உருளைக்கிழங்கு, சீனிக் கிழங்கு, செலரி (Celery) கீரை, காளான், காரட் மற்றும் வெங்காயம் ஆகியவற்றை ஒன்று சேர்த்து மிக மிதமான சூட்டில் அதிக நேரம் வேகவிட வேண்டும். பிறகு அது நன்கு வெந்ததற்கு அடையாளமாக வீடெங்கும் மணம் வீசும். அதை சுவைக்கும்பொழுது, அதன் சுவை மகிழ்ச்சியளிக்கும். அப்பொருட்கள் எல்லாம் தனித் தனியாக கொண்டுவர முடியாத சுவையை, அவை யாவும் இணைந்து கொடுக்கின்றன . மிக மிதமான சூட்டில் அதிக நேரம் எடுத்து விளைவித்தாலும், அது என்னுடைய நன்மைக்கே.

“சகலமும் நன்மைக்கேதுவாக நடக்கிறது,” என்கிற சொற்றொடரை பாடுகளின் அடிப்படையில் கூறின பொழுது, ‘ஒருங்கிணைந்த செயல்பாடு’ என்று நாம் இன்று
உபயோகிக்கும் வார்த்தையின் மூல வார்த்தையை பவுல் உபயோகித்துள்ளார். “அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த்தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்” (ரோ. 8:28) என எழுதியுள்ளார். தேவன் துயரங்களை, துன்பங்களை விளைவிப்பவர் அல்ல, மாறாக அச்சூழ்நிலைகளை தன்னுடைய தெய்வீக திட்டங்களோடு இணைத்து நன்மை விளைவிக்கவே விரும்புகிறார் என்பதை ரோமர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என பவுல் விரும்பினார். “நன்மைக்கேதுவானது’ என்று பவுல் குறிப்பிட்டது நிலையற்ற ஆசீர்வாதங்களாகிய சுகம், செழிப்பு, புகழ் அல்லது வெற்றியை அல்ல, மாறாக “தன்னுடைய குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு” உரிய நன்மையை (வச. 29).

நம்முடைய பரம பிதா எல்லா துன்பங்களையும், துயரங்களையும், தீமைகளையும் ஒன்று சேர்த்து அவருடைய நாம மகிமைக்காகவும், நம்முடைய ஆவிக்குரிய ஆசீர்வாதங்களுக்காகவும் நன்மை விளைவிக்கும்படி செய்வதால், நாம் பொறுமையோடும், நம்பிக்கையோடும் காத்திருப்போமாக. ஏனெனில் அவர் நம்மை இயேசுவைப் போல மாற்ற விரும்புகிறார்.

திட்டமிடாத இரக்க செயல்கள்

1982ஆம் ஆண்டு ஒரு உணவகத்திலுள்ள தட்டை வைக்கும் சிறு மேஜை விரிப்பில் “திட்டமிடாத இரக்கச் செயல்களையும், காரணமற்ற அழகிய செயல்களையும் செய்யப் பழகுங்கள்” என அமெரிக்க எழுத்தாளராகிய ஆனி ஹெர்பட் (Anne Herbert) கிறுக்கியதாக சிலர் கூறுவார்கள். இக்கருத்து சினிமா மற்றும் இலக்கிய படைப்புகளின் மூலம் பிரபலமாக்கப்பட்டு இன்று நம் சொல் அகராதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது.

இப்பொழுது கேள்வி என்னவெனில், “ஏன்?” ஏன் நாம் இரக்கம் பாராட்ட வேண்டும்? இயேசுவை பின்பற்றுகிறவர்களுக்கு, பதில் தெளிவாய் உள்ளது. அதாவது, தேவனுடைய அன்பையும், இரக்கத்தையும் வெளிப்படுத்தவே.

இந்த நியமத்திற்கேற்ற ஒரு உதாரணத்தை பழைய ஏற்பாட்டில் மோவாபியப் பெண்ணாகிய ரூத்தினுடைய கதையிலே காணலாம். அவள் அந்நிய தேசத்தை சேர்ந்தவள். ஆகையால் இத்தேசத்தின் மொழியையும், கலாச்சாரத்தையும் அவள் அறிந்திருக்கவில்லை. அதுமட்டுமின்றி, அவள் மோசமான வறுமையில் இருந்தபடியினால், அவளைக் கவனியாமல் அசட்டை செய்த ஜனத்தின் உதவியையே முழுமையாக எதிர்பார்த்திருந்தாள்.

ஆனால், அந்த இஸ்ரவேலரில் ஒருவன் அவளுக்கு கிருபை பாராட்டி அவளுடைய இருதயத்தோடே பேசினான் (ரூத் 2:13). தன்னுடைய வயல்களில் அறுவடைக்கும் பின் மீதமுள்ள தானியங்களை அவள் எடுத்துக்கொள்ள அனுமதித்தான். ஆனால் சாதாரண உதவியைக் காட்டிலும், தன்னுடைய இரக்கத்தின் மூலம், செட்டைகளை விரித்து அடைக்கலம் அளிக்கும் கனிவான இரக்கத்தையும், அன்பான கிருபையையும் உடைய தேவனை வெளிப்படுத்தினான். பின்பு அவள் போவாஸின் மனைவியாக தேவனுடைய குடும்பத்தில் அங்கத்தினராகி, உலக இரட்சகராகிய இயேசு பிறந்த வம்சாவளியின் முன்னோர்களில் ஒருவர் ஆனாள் (மத். 1:1-16).

இயேசுவின் நாமத்தினாலே நாம் செய்யும் ஒரு இரக்கமுள்ள செயல் என்ன விளைவை விளைவிக்கும் என நமக்கு தெரியாது.

பழையது ஆனாலும் புதியது

2014ஆம் ஆண்டு கென்டக்கி (Kentucky) யில் உள்ள தேசிய கார்வெட் (Corvette) அருங்காட்சியத்தில் ஒரு புதைகுழி தோன்றியது. அதில் ஈடுசெய்ய முடியாத எட்டு உயர்தர செவ்ரோலெட் கார்வெட் பந்தயக் கார்கள் (Chevrolet Corvette Sports Cars) புதையுண்டன. அவ்வாகனங்கள் மிகவும் சேதமடைந்தன. அவற்றில் சில பழுது நீக்கம் செய்ய முடியாத  அளவிற்கு சிதைந்து போயின.

அதில் ஒரு குறிப்பிட்ட கார் அதிக கவனத்தை ஈர்த்தது. ஏனெனில் 1992ஆம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட கார்களில் 10 லட்சம் இலக்கை எட்டிய கார் அது. ஆகவே அங்கிருந்த கார்களிலே மிகவும் விலையேறப்பெற்ற வாகனம் அது. புதைக்குழியிலிருந்து எடுக்கப்பட்டபின்பு இந்த பொக்கிஷத்திற்கு நிகழ்ந்தவை மிகவும் சுவாரஸ்யமானது. கைதேர்ந்த நிபுணர்கள் அவ்வாகனத்தை புத்தம் புதிய வாகனமாக மாற்றிவிட்டார்கள். அதின் மூலப்பொருட்களை பழுது பார்த்து அதை சரிசெய்து விட்டார்கள். இந்த அழகான சிறிய கார் பயங்கரமான நிலையில் இருந்திருந்தாலும் அது உற்பத்தி செய்த நாளில் எவ்வளவு அழகாய் காட்சியளித்ததோ அதைப்போலவே இப்பொழுதும் உள்ளது.

பழைய சேதமடைந்த பொருள் புதிதாக்கப்பட்டது.

கிறிஸ்துவுக்குள் விசுவாசிகளாகிய நமக்கு தேவன் வைத்திருப்பவற்றை பெரிதாக இச்சம்பவம் நினைவுகூருகிறது. வெளிப்படுத்தின விசேஷம் 21:1ல் தான் கண்ட “புதிய வானம், புதிய பூமியை” குறித்து யோவான் கூறுகிறார். அநேக வேதாகம பண்டிதர்கள் “புதிய பூமி” என்பது புதுப்பிக்கப்பட்ட பூமியே என கருதுகிறார்கள். ஏனெனில், இங்கு குறிப்பிடப்பட்டுள்ள “புதிய” என்னும் வார்த்தை “புதிதான” அல்லது “புதுப்பிக்கப்பட்ட” என்னும் அர்த்தம் உடையதாய் இருக்கிறது. அதாவது அழுகி நாசமடைந்ததை துடைத்து புத்தம் புதிதாய் மாற்றியது போல. இப்பூமியில் சீர்கெட்டுள்ள அனைத்தையும் தேவன் புதுப்பித்து, விசுவாசிகளாகிய நாம் அவரோடு வாழ, நாம் அறிந்த பூமியை புத்தம் புதிய பூமியாக மாற்றிவிடுவார். நமக்கு பரிட்சயமான ஆனால் அதே சமயம் புதிதாக்கப்பட்ட புதிய அழகான பூமி என்னும் அற்புதமான இச்சத்தியத்தை சிந்தித்துப் பார்த்தால் தேவனுடைய மகத்தான கைவண்ணம் விளங்கும்