Archives: ஜனவரி 2017

கவனிக்கப்படாத ஹீரோக்கள்

வேதாகமத்திலுள்ள கதைகள் நம்மை வியப்பில் ஆழ்த்தி சிந்திக்கத் தூண்டுபவை. உதாரணமாக, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு தேவ ஜனங்களை மோசே அழைத்துக்கொண்டு சென்றபொழுது, அமலேக்கியர் அவர்களைத் தாக்கினார்கள். அப்பொழுது, மலையுச்சிக்கு சென்று தேவனுடைய கோலை உயர்த்தி பிடிக்க வேண்டும் என்று மோசேவுக்கு எப்படித் தெரியும்? (யாத். 17:8-15). அதைப்பற்றி வேதாகமத்தில் குறிப்பிடப் படவில்லை. ஆனால் மோசே தன் கரங்களை உயர்த்தினபொழுது, இஸ்ரவேலர்கள் யுத்தத்தில் மேற்கொண்டார்கள், அவன் கைகளை கீழே இறக்கினபொழுது அமலேக்கியர் மேற்கொண்டார்கள். ஆகவே மோசே சோர்வுற்ற பொழுது, அவருடைய சகோதரனாகிய ஆரோனும், ஊர் என்பவனும் மோசேயினுடைய கரங்களை தாங்கிப் பிடித்து இஸ்ரவேலர் வெற்றிசிறக்க உதவினார்கள்.

இந்த ஊர் என்னும் மனிதனைப் பற்றி நமக்கு அதிகமாக சொல்லப்படவில்லை. ஆனால் அவர் இஸ்ரவேலருடைய வரலாற்றின் இப்பகுதியில் மிக முக்கியமான பங்களித்தார். இது கவனிக்கப்படாத ஹீரோக்களின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. அவர்கள் கண்டு கொள்ளப்படாத பாத்திரமாக விளங்கினாலும், தலைவர்களுக்கு ஆதரவளித்து உற்சாக மூட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.

ஒரு வேளை தலைவர்கள் மாத்திரமே வரலாற்று புத்தகங்களில் குறிப்பிடப்பட்டும், சமூக ஊடகங்களில் பாராட்டுப்பெற்றும் இருக்கலாம், ஆனால் அமைதியாகவும், உண்மையாகவும் வேறு வழிகளில் ஊழியம் செய்யும் சாட்சியுள்ள நபர்களை தேவன் ஒருபோதும் கவனியாதிருக்க மாட்டார். தினமும் ஜெபத்திலே தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்காக பரிந்து பேசுபவனை தேவன் காண்கிறார். ஆலயத்திலே ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நாற்காலிகளை எடுத்துப்போடும் பெண்ணை அவர் காண்கிறார். தன்னுடைய அயலானுக்கு ஆறுதலான வார்த்தை கூறுபவனை அவர் காண்கிறார்.

நம்முடைய பணி நமக்கு அற்பமாகத் தோன்றினாலும், உண்மை என்னவெனில் தேவன் நம்மை பயன்படுத்துகிறார். அதைப்போலவே நமக்கு உதவி செய்திடும் கவனிக்கப்படாத ஹீரோக்களை, நாம் கவனித்து நன்றி கூறுவோமாக.

மாம்சத்துக்குரியவன்

ஆங்கிலேய எழுத்தாளர் ஈவ்லின் வாக் (Evelyn Waugh) பிரயோகிக்கும் வார்த்தைகள் அவருடைய குணத்தில் உள்ள குறைகளை உறுதி செய்வது போலிருக்கும். இறுதியாக அந்த நாவலாசிரியர் கிறிஸ்தவனாக மாறினாலும் போராடிக் கொண்டிருந்தார். ஒரு நாள் ஒரு பெண் அவரைப் பார்த்து, “நீங்கள் கிறிஸ்தவன் என்று சொல்லிக்கொண்டு எப்படி உங்களால் இப்படி நடந்துகொள்ள முடிகிறது?” என கேட்டாள். அதற்கு அவர், “ஒரு வேளை நீங்கள் கூறும் அளவிற்கு மோசமானவனாகவே இருக்கலாம். ஆனால் உண்மை என்னவெனில், கிறிஸ்தவம் இல்லையெனில், நான் மனிதனாகவே இருந்திருக்க மாட்டேன்,” என பதிலளித்தார்.

அப்போஸ்தலனாகிய பவுல் விவரித்த உள்ளார்ந்த போராட்டத்தை வாக் போராடி கொண்டிருந்தார். பவுல், “நன்மைசெய்ய வேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, நன்மைசெய்வதோ என்னிடத்திலில்லை,” எனக் கூறுகிறார் (ரோம. 7:18). மேலும், “நியாயப்பிரமாணம் ஆவிக்குரியதாயிருக்கிறது, நானோ...மாம்சத்துக்குரியவனாய் இருக்கிறேன்,” என்றும் கூறினார் (வச. 14). அதையே இன்னும் விவரித்து, “உள்ளான மனுஷனுக்கேற்றப்படி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின் மேல் பிரியமாயிருக்கிறேன். ஆகிலும் அதற்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை காண்கிறேன். இந்த மரண சரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?” என கேட்கிறார் (வச. 22-24). பின்பு வெற்றிக்களிப்புடன், “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துமூலமாய் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்,” (வச. 25) என்று தேவன் அளிக்கும் விடுதலையை அறிவிக்கிறார்.

நம்முடைய பாவத்தை உணர்ந்து, நமக்கு இரட்சகர் தேவை என்பதை ஒப்புக்கொண்டு, விசுவாசத்தோடு கிறிஸ்துவண்டை வரும்பொழுது, நாம் அக்கணமே புதிய சிருஷ்டி ஆகிறோம். ஆனால் நம்முடைய மனம் புதிதாவது ஒரு வாழ்நாள் பயணம். அதை சீஷனாகிய யோவான் கண்டுணர்ந்து, “இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்,” எனக் கூறினார் (1 யோவா. 3:2).

இடியும் மின்னலும்

பல வருடங்களுக்கு முன்பு நானும், என்னுடைய நண்பரும் குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த பொழுது, தீடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. நாங்கள் அருகில் உள்ள ஒரு தோப்பில் ஒதுங்கி நின்றோம். மழை விடாமல் பெய்து கொண்டிருந்தபடியால், பேசாமல் கிளம்புவதே நன்று என முடிவு செய்து, எங்கள் வண்டியை நோக்கி ஓடினோம். வண்டியை அடைந்து கதவைத் திறந்தபொழுது, நாங்கள் நின்றுகொண்டிருந்த அத்தோப்பின் மீது பலத்த இடி ஓசையுடன் மின்னல் வெட்டி அக்கினி பந்தாக விழுந்தது. அதன் விளைவாக அம்மரங்களின் இலைகளும் பட்டைகளும் உரிந்து விழுந்து கொஞ்சம் கிளைகள் மாத்திரமே மிஞ்சியது. அதுவும் புகைந்து கொண்டிருந்தது. பின்பு அமைதி நிலவியது.

இக்காட்சியை கண்டு நாங்கள் பிரமித்து நடுங்கிக் கொண்டிருந்தோம்.

எங்கள் இடாஹோ (Idaho) பள்ளத்தாக்கில் மின்னல்வெட்டுக்களையும், இடியோசைகளையும் காணலாம். மயிரிழையில் உயிர்பிழைத்திருந்தாலும், அவை எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த அதீத சக்தி எனக்கு மிகவும் பிடிக்கும். மின்சக்தி! அதிர்வு! அதிர்ச்சி மற்றும் பிரமிப்பு! இவை அனைத்தும் எனக்கு பிடிக்கும். பூமியும், அதிலுள்ள அனைத்தும் நடுநடுங்குகின்றன. ஆனால் இவை அனைத்திற்கும் பின் அமைதி நிலவுகிறது.

இடியும் மின்னலும் தேவனுடைய சத்தத்திற்கு அடையளமாய் இருப்பதினாலேயே எனக்கு அவை மிகவும் பிடிக்கும் (யோபு 37:4). அவர் தம்முடைய வார்த்தையின் மூலம் தம்முடைய அளவற்ற மகிமையையும், வல்லமையையும் வெளிப்படுத்துகிறார். “கர்த்தருடைய சத்தம் அக்கினி ஜூவாலைகளை பிளக்கும்.. கர்த்தர் தமது ஜனத்திற்கு பெலன்கொடுப்பார்; கர்த்தர் தமது ஜனத்திற்கு சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்” (சங். 29:7,11). நாம் பொறுமையோடிருக்கவும், அன்பாக இருக்கவும், சகித்துக் கொள்ளவும், அமைதியாக அமர்ந்திருக்கவும், எழுந்து செல்லவும் அல்லது ஒன்றுமே செய்யாமலிருக்கவும் அவர் நமக்கு பெலனளிப்பார்.

சமாதானத்தின் தேவன் உம்மோடு கூட இருப்பாராக.

விருதாவாயிராது

“சிறந்ததே நடக்கும் என நம்பு, ஆனால் மிக மோசமான விளைவிற்கு தயாராகவுமிரு,” என எனக்கு பரிச்சயமான நிதி ஆலோசகர் ஒருவர் பணத்தை முதலீடு செய்வதிலுள்ள உண்மையான நிலையை விளக்கினார். நம் வாழ்வில் நாம் தீர்மானிக்கும் அநேக தீர்மானங்களின் விளைவுகளும் நிச்சயமற்றதாகவே உள்ளது. ஆனால் நாம் தேர்ந்தெடுக்கும் பாதை அப்படியல்ல. ஏனெனில் நாம் தெரிந்துகொண்ட இப்பாதையில் பயணிக்கும்பொழுது, என்ன நேர்ந்தாலும் இறுதியில் அது ஒரு வீண் பிரயாசமாய் இருக்கவில்லை என்பதை நாம் அறிந்துகொள்வோம்.

ஒழுக்கக் கேட்டிற்கு பெயர்பெற்ற கொரிந்து பட்டணத்தில், அப்போஸ்தலனாகிய பவுல் அங்குள்ள கிறிஸ்தவர்களோடு ஒரு வருடம் தங்கியிருந்தார். அவர் அங்கிருந்து சென்ற பின், கிறிஸ்துவுக்கென்று சாட்சியாக ஜீவிப்பதில் எப்பயனுமில்லை என்று தவறாக நினைத்து சோர்ந்து போய்விடாதிருக்கும்படி, கடிதத்தின் மூலம் அவர்களை உற்சாகப் படுத்தினார். மேலும் ஒரு நாள் தேவன் திரும்பவும் வந்து, மரணத்தை விழுங்கி ஜெயமெடுப்பார் என உறுதியளித்தார் (1 கொரி. 15:52-55).

இயேசுவுக்காக உண்மையாக ஜீவிப்பது கடினமானதாகவும், சோர்வளிப்பதாயும், சில சமயம் அபாயகரமானதாகவும் இருக்கலாம், ஆனால் அது ஒருபோதும், பிரயோஜனமற்றதோ அல்லது வீணானதோ அல்ல. நாம் தேவனோடு நடந்து, அவருடைய பிரசன்னத்திற்கும், வல்லமைக்கும் சாட்சியாய் இருக்கும் பொழுது, நம்முடைய வாழ்க்கை விருதாவாயிராது! இது நிச்சயமே.

எதுவும் குறைவின்றி

பெட்டிபடுக்கையின்றி, அத்தியாவசிய பொருட்களின்றி, மாற்றுத்துணியின்றி, பணம் இன்றி, கிரெடிட்கார்ட் இன்றி ஒரு பயணத்தை கற்பனை செய்து பார்க்கவே பயமாக இருக்கிறதல்லவா? சொல்லப்போனால் இது ஞானமற்றதும் கூட.

ஆனால், தன்னுடைய 12 சீஷர்களையும் நற்செய்தி அறிவித்து சுகமாக்கும்படி கட்டளையிட்டு, முதல்முறை அவர்களை ஊழியத்திற்கு அனுப்பினபொழுது இதைத்தான் இயேசு கூறினார். “வழிக்குப் பையையாகிலும், அப்பத்தையாகிலும், கச்சையில் காசையாகிலும், எடுத்துக்கொண்டுபோகாமல், ஒரு தடியைமாத்திரம் எடுத்துக்கொண்டுபோகவும்; பாதரட்சைகளைப் போட்டுக்கொண்டுபோகவும், இரண்டு அங்கிகளைத் தரியாதிருக்கவும்” என கட்டளையிட்டார் (மாற். 6:8-9).

இருப்பினும் சில காலம் கழித்து, தான் சென்றபின் அவர்கள் செய்யவேண்டிய பணிக்காக அவர்களை ஆயத்தப்படுத்தி கொண்டிருந்தபொழுது, தன்னுடைய சீஷர்களை நோக்கி, “இப்பொழுதோ பணப்பையும் சாமான்பையும் உடையவன் அவைகளை எடுத்துக்கொள்ளக்கடவன்; பட்டயம் இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக்
கொள்ளக்கடவன்” என இயேசு கூறினார் (லூக். 22:36).

அப்படியென்றால் இதன் அர்த்தம்தான் என்ன? அதாவது, நம்முடைய தேவைகள் அனைத்தையும் தேவனே சந்திப்பார் என்கிற நம்பிக்கை ஏற்படுத்தவே.

தன் சீஷர்களுடைய முதலாவது ஊழியப் பயணத்தை குறிப்பிட்டு, “நான் உங்களைப் பணப்பையும் சாமான்பையும் பாதரட்சைகளும் இல்லாமல் அனுப்பினபோது, ஏதாகிலும் உங்களுக்கு குறைவாயிருந்ததா?” என்று இயேசு தன் சீஷர்களை நோக்கி கேள்வி எழுப்பிய பொழுது, “ஒன்றும் குறைவாயிருந்ததில்லை” என பதிலளித்தார்கள் (வச. 35). தேவன் கட்டளையிட்ட எல்லாவற்றையும் செய்துமுடிக்க வேண்டிய அனைத்தும் அவர்களிடத்தில் இருந்தது. அதாவது அவருடைய ஊழியத்தை செய்து முடிக்க தேவையான வல்லமையையும் அதிகாரத்தையும் அவர்களுக்கு கொடுத்தார் (மாற். 6:7).

தேவன் நம்முடைய தேவைகள் அனைத்தையும் சந்திப்பார் என விசுவாசிக்கிறோமா? அதுமட்டுமின்றி திட்டமிட்டு நம்முடைய கடமைகளைச் சரியாக செய்கிறோமா? அவருடைய பணியை செய்ய விசுவாசம் கொள்வோமாக.