எட்வர்ட் க்ளீ (Edward Klee) பல ஆண்டுகள் கழித்து பெர்லின் (Berlin) பட்டணத்திற்கு திரும்பி வந்த பொழுது, தான் நேசித்து நினைவுகூர்ந்த எதுவும் அங்கில்லை என கண்டான். அவனைப்போலவே அப்பட்டணமும் வியத்தகுவிதம் கணிசமாக மாறியிருந்தது. ஹெமிஸ்பியர்ஸ் (Hemispheres) பத்திரிக்கையில் அதைக்குறித்து க்ளீ “நீங்கள் மிகவும் நேசித்த பட்டணத்திற்கு திரும்பி செல்வது எதிர்பாராத விளைவை உண்டாக்கலாம், நீங்கள் ஏமாற்றமுமடையலாம்” என எழுதியிருந்தான். முந்தையகாலத்தில் நாம் வாழ்ந்த இடங்களுக்கு செல்லும் பொழுது, அவை நமக்குள் துக்கத்தையும், ஏதோவொன்றை இழந்தது போன்ற உணர்வையும் உண்டாக்கலாம். ஆனால் உண்மையென்னவெனில் நம்முடைய வாழ்வில் முக்கியமான பங்கு வகித்த அவ்விடம் மாறியிருப்பது போலவே நாமும் மாறிவிட்டோம்.
இஸ்ரவேலிலிருந்து நாடு கடத்தப்பட்ட நெகேமியா, அநேக ஆண்டுகள் கழித்து, எருசலேம் பட்டணத்தின் பேரழிவையும், அங்குள்ள மக்களின் மோசமான நிலையையும் கேள்விப்பட்டான். ஆகவே, தான் எருசலேமிற்கு திரும்பிச்சென்று மதில்களை மறுபடியும் கட்டியெழுப்ப பெர்சியா ராஜாவாகிய அர்தசஷ்டாவிடம் அனுமதி கேட்டான். ஒரு இரவு முழுவதும் அப்பட்டணத்தின் நிலைமையை பார்வையிட்டு திரும்பிய நெகேமியா (2:13-15) பின்பு அங்கு வசிப்பவர்களை நோக்கி, “எருசலேம் பாழாயிருக்கிறதையும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டுக்கிடக்கிறதையும், நாம் இருக்கிற சிறுமையையும் பார்க்கிறீர்களே; நாம் இனி நிந்தைக்குள்ளாயிராதபடிக்கு, எருசலேமின் அலங்கத்தைக் கட்டுவோம் வாருங்கள்,” என்று கூறினான் (வச. 17).
நெகேமியா கடந்த காலத்தை நினைத்து துக்கித்து இருக்கவில்லை, மாறாக மறுபடியும் கட்டி எழுப்பவே திரும்ப வந்தான். நம்முடைய வாழ்விலும் பழுதுபட்டிருக்கும் பாகங்களை சீர்படுத்தும்பொழுது இந்த வல்லமையான பாடத்தை நாம் நினைவிற் கொள்வோமாக. கிறிஸ்துவுக்குள் உள்ள நம்முடைய விசுவாசமும், அவருடைய வல்லமையும், நாம் பின்னோக்கி பாராமல், முன்னோக்கிச் செல்லவும், மறுபடியும் கட்டி எழுப்பவும் நமக்கு உதவிடும்.
நம்முடைய கடந்த காலத்தை நம்மால் மாற்ற இயலாது, மாறாக நம்முடைய எதிர்காலத்திற்காக தேவன் நம்மை மாற்றிக் கொண்டிருக்கிறார்.