வேதாகமத்திலுள்ள கதைகள் நம்மை வியப்பில் ஆழ்த்தி சிந்திக்கத் தூண்டுபவை. உதாரணமாக, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு தேவ ஜனங்களை மோசே அழைத்துக்கொண்டு சென்றபொழுது, அமலேக்கியர் அவர்களைத் தாக்கினார்கள். அப்பொழுது, மலையுச்சிக்கு சென்று தேவனுடைய கோலை உயர்த்தி பிடிக்க வேண்டும் என்று மோசேவுக்கு எப்படித் தெரியும்? (யாத். 17:8-15). அதைப்பற்றி வேதாகமத்தில் குறிப்பிடப் படவில்லை. ஆனால் மோசே தன் கரங்களை உயர்த்தினபொழுது, இஸ்ரவேலர்கள் யுத்தத்தில் மேற்கொண்டார்கள், அவன் கைகளை கீழே இறக்கினபொழுது அமலேக்கியர் மேற்கொண்டார்கள். ஆகவே மோசே சோர்வுற்ற பொழுது, அவருடைய சகோதரனாகிய ஆரோனும், ஊர் என்பவனும் மோசேயினுடைய கரங்களை தாங்கிப் பிடித்து இஸ்ரவேலர் வெற்றிசிறக்க உதவினார்கள்.
இந்த ஊர் என்னும் மனிதனைப் பற்றி நமக்கு அதிகமாக சொல்லப்படவில்லை. ஆனால் அவர் இஸ்ரவேலருடைய வரலாற்றின் இப்பகுதியில் மிக முக்கியமான பங்களித்தார். இது கவனிக்கப்படாத ஹீரோக்களின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. அவர்கள் கண்டு கொள்ளப்படாத பாத்திரமாக விளங்கினாலும், தலைவர்களுக்கு ஆதரவளித்து உற்சாகமூட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.
ஒரு வேளை தலைவர்கள் மாத்திரமே வரலாற்று புத்தகங்களில் குறிப்பிடப்பட்டும், சமூக ஊடகங்களில் பாராட்டுப்பெற்றும் இருக்கலாம், ஆனால் அமைதியாகவும், உண்மையாகவும் வேறு வழிகளில் ஊழியம் செய்யும் சாட்சியுள்ள நபர்களை தேவன் ஒருபோதும் கவனியாதிருக்க மாட்டார். தினமும் ஜெபத்திலே தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்காக பரிந்து பேசுபவனை தேவன் காண்கிறார். ஆலயத்திலே ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நாற்காலிகளை எடுத்துப்போடும் பெண்ணை அவர் காண்கிறார். தன்னுடைய அயலானுக்கு ஆறுதலான வார்த்தை கூறுபவனை அவர் காண்கிறார்.
நம்முடைய பணி நமக்கு அற்பமாகத் தோன்றினாலும், உண்மை என்னவெனில் தேவன் நம்மை பயன்படுத்துகிறார். அதைப்போலவே நமக்கு உதவி செய்திடும் கவனிக்கப்படாத ஹீரோக்களை, நாம் கவனித்து நன்றி கூறுவோமாக.
கவனிக்கப்படாத ஹீரோக்களை தேவன் எப்பொழுதும் காண்கிறார்.