ஆங்கிலேய எழுத்தாளர் ஈவ்லின் வாக் (Evelyn Waugh) பிரயோகிக்கும் வார்த்தைகள் அவருடைய குணத்தில் உள்ள குறைகளை உறுதி செய்வது போலிருக்கும். இறுதியாக அந்த நாவலாசிரியர் கிறிஸ்தவனாக மாறினாலும் போராடிக் கொண்டிருந்தார். ஒரு நாள் ஒரு பெண் அவரைப் பார்த்து, “நீங்கள் கிறிஸ்தவன் என்று சொல்லிக்கொண்டு எப்படி உங்களால் இப்படி நடந்துகொள்ள முடிகிறது?” என கேட்டாள். அதற்கு அவர், “ஒரு வேளை நீங்கள் கூறும் அளவிற்கு மோசமானவனாகவே இருக்கலாம். ஆனால் உண்மை என்னவெனில், கிறிஸ்தவம் இல்லையெனில், நான் மனிதனாகவே இருந்திருக்க மாட்டேன்,” என பதிலளித்தார்.
அப்போஸ்தலனாகிய பவுல் விவரித்த உள்ளார்ந்த போராட்டத்தை வாக் போராடி கொண்டிருந்தார். பவுல், “நன்மைசெய்ய வேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, நன்மைசெய்வதோ என்னிடத்திலில்லை,” எனக் கூறுகிறார் (ரோம. 7:18). மேலும், “நியாயப்பிரமாணம் ஆவிக்குரியதாயிருக்கிறது, நானோ…மாம்சத்துக்குரியவனாய் இருக்கிறேன்,” என்றும் கூறினார் (வச. 14). அதையே இன்னும் விவரித்து, “உள்ளான மனுஷனுக்கேற்றப்படி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின் மேல் பிரியமாயிருக்கிறேன். ஆகிலும் அதற்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை காண்கிறேன். இந்த மரண சரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?” என கேட்கிறார் (வச. 22-24). பின்பு வெற்றிக்களிப்புடன், “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துமூலமாய் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்,” (வச. 25) என்று தேவன் அளிக்கும் விடுதலையை அறிவிக்கிறார்.
நம்முடைய பாவத்தை உணர்ந்து, நமக்கு இரட்சகர் தேவை என்பதை ஒப்புக்கொண்டு, விசுவாசத்தோடு கிறிஸ்துவண்டை வரும்பொழுது, நாம் அக்கணமே புதிய சிருஷ்டி ஆகிறோம். ஆனால் நம்முடைய மனம் புதிதாவது ஒரு வாழ்நாள் பயணம். அதை சீஷனாகிய யோவான் கண்டுணர்ந்து, “இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்,” எனக் கூறினார் (1 யோவா. 3:2).
மன்னிக்க முடியாத உன்னை தேவன் மன்னித்தது போல, மன்னிக்க முடியாத மற்றொருவனை மன்னிப்பவனே கிறிஸ்தவன். சி.எஸ். லூயிஸ்