அன்றைய தினத்தில் காலைவேளையில் சபையின் ஓர் அறை மிகவும் பரபரப்புடன் காணப்பட்டது. ஒரு டஜன் குழந்தைகள் ஓடி விளையாடிக்கொண்டிருந்தனர். அங்கு நான் உதவியாளராய் இருந்தேன். சற்று நேரத்தில் அறையின் சீதோஷண நிலைமாறி வெப்பம் அதிகரித்தது. அதனால் நான் கதவைத் திறந்து வைத்தேன். ஒரு சிறுவன் இந்த சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக்கொண்டு யாரும் பார்க்காத வேளையில் தப்பித்து ஓடினான். நானும் பின் தொடர்ந்து ஓடினேன். அப்பொழுது அவன் தன் தந்தையிடம் ஓடிச் சென்றதைக் கண்டு நான் ஆச்சரியம் அடையவில்லை.
பரபரப்பான வாழ்க்கையில் நாம் சிக்கிக் கொள்ளும்போது அந்த சிறுவன் செய்ததைதான் நாமும் செய்ய வேண்டும். அதாவது அவன் தன் தந்தையிடம் சென்றான். இயேசு தன்னுடைய பரலோக பிதாவோடு நேரம் செலவிடவும் ஜெபிக்கவும் வாய்ப்புகளைத் தேடினார். மாம்சத்தில் அவரது பெலனை எல்லாம் ஊழியத்திற்கு செலவிட்ட போது இப்படி தனித்திருந்து தான் அவர் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார் என்று சிலர் கூறுவதுண்டு. மத்தேயு எழுதின சுவிசேஷத்தில், இயேசு தனித்திருக்க எண்ணி தனிமையான இடத்தை நோக்கிச் செல்வதைக் காணலாம். அப்போது அவரை மக்கள் சூழ்ந்து கொண்டு பின் தொடர்ந்தனர். அவர்களது தேவை அறிந்த இயேசு அற்புதமாய் சுகமும் உணவும் அளித்தார். “அவர் ஜனங்களை அனுப்பிவிட்ட பின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார்” (மத். 14:23).
இயேசு திரும்ப திரும்ப அநேக ஜனங்களுக்கு உதவி செய்தார். ஆனால் அவர் பரபரப்புடனோ, சோர்வுடனோ காணப்படவில்லை. அவர் தேவனோடு கொண்ட நல்லுறவை ஜெபத்தினால் எப்போதும் ஸ்திரப்படுத்திக் கொண்டேயிருந்தார். நீங்கள் எப்படி செயல்படுகின்றீர்கள்? தேவனை அநுபவித்து அவரது அன்பையும், பெலனையும், முழுமையையும் அறிந்து கொள்ள ஆர்வத்துடன் அவரோடு நேரம் செலவிடவும், தனித்திருக்கவும் செய்கிறீர்களா?
நாம் தேவனோடு கிட்டிச் சேரும் போது நமது மனம் புத்துயிர் பெறுகின்றது.
அதனால் புதுபெலன் அடைந்து புதிதாகிறோம்.