நான் சிறுபிள்ளையாக இருந்தபொழுது, எல். ஃபிரான்க் பாம் (L. Frank Baum) அவர்களுடைய ஓஸ் தேசம் (Land of Oz) புத்தகங்களின் தீவிர வாசகனாக இருந்தேன். சமீபத்தில், அசல் வரைபடங்கள் அடங்கிய ‘ஓஸ் தேசத்தில் ரின்கிடின்க்’ (Rinkitink in Oz) என்னும் புத்தகத்தை படிக்க நேர்ந்தது. அதில் உண்மைமிக்க கட்டுக்கடங்காத நல்ல இருதயமுள்ளவரான ரின்கிட்டின்க் (Rinkitink) ராஜாவின் கோமாளித்தனமான சேட்டைகளை வாசித்து சிரித்தேன். “அவன் இளகிய மனமும், தயவும் நிறைந்தவன். ஞானமாய் இருப்பதைக் காட்டிலும் இது சிறந்தது,” என அவனைக் குறித்து இளவரசன் இன்கா (Prince Inga) விவரிக்கிறார்.
எவ்வளவு எளிமையும், விவேகமுள்ள கூற்று இது! ஆயினும், நமக்கு பிரியமானவரின் இருதயத்தை ஒரு கடினவார்த்தையினால் காயப்படுத்தாதவன் யார்? அப்படிசெய்யும் பொழுது, சமாதானத்தைக் கலைத்துப் போடுவது மட்டுமின்றி, நாம் நேசிப்பவர்களுக்கு நாம் செய்த நன்மைகளை கடினவார்த்தைகளினால் நாமே ரத்துசெய்துவிடுகிறோம். 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹான்னா மோர் (Hannah More) என்னும் ஆங்கில எழுத்தாளர், “ஒரு சிறிய அன்பற்ற தன்மை பெரிய குற்றமாகும்,” என கூறியுள்ளார்.
நற்செய்தி என்னவெனில், யார் வேண்டுமானாலும் இரக்கமுள்ளவனாகலாம். ஒரு எழுச்சியூட்டும் பிரசங்கத்தை பிரசங்கிக்க அல்லது கடினமான கேள்விகளுக்கு பதில் கூற அல்லது பெரும் கூட்டத்திற்கு சுவிசேஷம் கூற திராணியில்லாமல் போகலாம். ஆனால், நாம் இரக்கமுள்ளவர்களாய் இருக்கமுடியும். அது எப்படி? ஜெபத்தின் மூலம். நம் இருதயங்களை இளகச்செய்யும் ஒரே வழி அதுவே. “கர்த்தாவே, என் வாய்க்குக் காவல் வையும்; என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும்” (சங். 141:3-4) என்று ஜெபிப்பதே.
அன்பு தணிந்துபோன இவ்வுலகில் தேவனுடைய இருதயத்திலிருந்து பொங்கும் இரக்கத்தைக் கொண்டுதான் பிறருடைய காயங்களை குணமாக்கி உதவமுடியும்.
எல்லா எல்லைக்கும் அப்பாற்பட்ட தேவன் என்னில் அன்பு கூர்ந்துள்ளார் என்ற
அறிவு, இந்த உலகத்தில் உள்ளவர்களை நான் அதே விதமாக நேசிக்கப் பலவந்தப்படுத்தும். ஆஸ்வல்ட் சேம்பர்ஸ்