ஊழியக்காராகிய என் கணவருக்கு, இரவு நேரத்தில் தொலைபேசியில் அழைப்பு வந்தது. எங்கள் சபையிலே ஜெப வீரராக இருந்த மூதாட்டி ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு 70 வயதிற்கு மேலிருக்கும். அவர் தனியாக வாழ்ந்து வந்தார். எதுவும் சாப்பிடவும், குடிக்கவும் முடியாத அளவிற்கு சுகவீனமாய் இருந்தார். மேலும் அவரால் பார்க்கவோ, நடக்கவோ இயலவில்லை. அவர் பிழைப்பாரோ அல்லது மரித்து விடுவாரோ என்று விளங்காமல், அவருடைய நல் வாழ்விற்காக தேவனிடம் அவருடைய இரக்கத்தையும், உதவியையும் நாடினோம். அவர்களை கவனித்துக் கொள்வதற்காக உடனடியாக சபையிலே ஒரு செயல்திட்டம் வகுத்து, இருபத்தினான்கு மணிநேரமும் அவர்களோடு யாராவது ஒருவர் இருக்கும்படியாக செயல்படுத்தப்பட்டது. இதனால், அவருக்கு மாத்திரம் சேவை செய்வதோடல்லாமல் கிறிஸ்தவ அன்பை அங்குள்ள மற்ற வியாதியஸ்தர்களுக்கும், அவர்களை விசாரிக்க வந்தவர்களுக்கும், மருத்துவ ஊழியர்களுக்கும் காண்பிக்க முடிந்தது.
சபையானது திக்கற்றவர்களுக்கு உதவுமாறு ஆதி கிறிஸ்தவர்களுக்கு யாக்கோபு தான் எழுதிய கடிதத்தில் அவர்களை உற்சாகப்படுத்துகிறார். விசுவாசிகள், கேட்பதோடு மாத்திரம் நின்று விடாமல், தாங்கள் கேள்விப்பட்டதை செயல்படுத்தும்படியாக அவர் விரும்பினார் (1:22-25). ஆதி நாட்களில், அனாதைகளையும், விதவைகளையும் கவனிக்க வேண்டியது (வச. 27) அவரவர் குடும்பங்களின் கடமையாக கருதப்பட்டது. அதாவது, அனாதைகளும், விதவைகளும் அவர்கள் குடும்பத்தையே எல்லாவற்றிக்கும் எதிர்பார்த்திருந்த பெலவீனமான ஒரு கூட்டம். ஆகவே தான் யாக்கோபு அவர்களை விசாரிக்குமாறு கூறகிறார்.
நம்முடைய சபையிலோ அல்லது சமுதாயத்திலோ பாரமாக கருதப்படுகிறவர்களுக்கு நாம் எப்படி பதிலளிக்கிறோம்? விதவைகளையும், திக்கற்ற பிள்ளைகளையும் விசாரிப்பது நம்முடைய விசுவாச வாழ்வின் அதிமுக்கியமான அங்கமாக நாம் கருதுகிறோமா? தேவையில் இருக்கும் மக்களுக்கு உதவி செய்ய நம் முன் இருக்கும் சந்தர்ப்பங்களை காண நம் கண்களை தேவன் திறந்தருளுவாராக.
உண்மையான விசுவாசம் நம்முடைய வார்த்தைகளை மாத்திரமல்ல,
நம் செயல்களையும் எதிர்பார்க்கிறது.