நீ எப்படி?
அவரவர் குடும்பங்களின் நன்றிகூறுதல் சம்பிரதாயங்கள்பற்றி, தன்னுடைய நண்பர்கள் பேசிக்கொண்டிருந்ததை எமிலி கேட்டுக்கொண்டிருந்தாள். “நாங்கள் ஒவ்வொருவரும், அறைக்குள் சுற்றிவந்தவாறு, எந்தெந்த காரியங்களுக்கெல்லாம் தேவனுக்கு நன்றி செலுத்த விரும்புகிறோமோ அதைக் கூறுவோம்,” என்று கேரி (Gary) கூறினான்.
இன்னொரு நண்பன் அவர்கள் குடும்பத்தின் நன்றிகூறுதல் உணவைப்பற்றியும், ஜெபவேளை குறித்தும் கூறினான். தன் தந்தை இறப்பதற்கு முன் அவரோடிருந்த நேரங்களை நினைவுகூர்ந்தான்: “என் தந்தைக்கு டிமென்ஷியா (Dementia) என்னும் வியாதி இருந்தபோதிலும், அவர் தேவனுக்கு ஏறெடுத்த நன்றி ஜெபங்கள் தெள்ளத் தெளிவாய் இருக்கும்” என்றான். ராண்டி, “அந்த விடுமுறை நாளிலே என் குடும்பத்தில் ஒன்றாக பாடுவதற்கான சிறப்புப் பாடல் நேரம் இருந்தது. என் பாட்டி பாடிக்கொண்டே இருப்பார்கள்” என்று பகிர்ந்தான். இதையெல்லாம் கேட்ட எமிலி தன் குடும்பத்தை நினைத்த பொழுது துக்கமும், பொறாமையும் கொண்டவளாய், “எங்க வீட்டு சம்பிரதாயப்படி வான்கோழி சாப்பிடுவோம், டிவி பார்ப்போம், தேவனைப்பற்றியோ நன்றிகூறுவது பற்றியோ பேசவே மாட்டோம்” என்று புலம்பினாள்.
அப்படிச் சொன்னவுடன், அவளுடைய மனப்பான்மையை எண்ணி சஞ்சலப்பட்டாள். ‘நீ அந்த குடும்பத்தில் ஒருத்தி. மாற்றங்களை கொண்டுவர, நீ என்ன செய்ய விரும்புகிறாய்?’ என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள். அவளுடைய சகோதர, சகோதரிகள், அவர்களின் பிள்ளைகள் மற்றும் பேரப் பிள்ளைகள் அனைவரையும் தனித்தனியாக சந்தித்து, அவர்களுக்காகத் தான் தேவனுக்கு நன்றி செலுத்துவதாக அவர்களிடம் கூற முடிவு செய்தாள். அந்த நாள் வந்த பொழுது, அப்படியே செய்தாள். அவர்கள் அனைவரும் அவள் அன்பை உணர்ந்தார்கள். இது மிக சுலபமான ஒன்றல்ல, ஏனெனில் அவள் வீட்டில் பொதுவாக இப்படிப் பேசுவதில்லை, ஆனால் அவளுடைய அன்பை ஒவ்வொருவரிடமும் பகிர்ந்து கொண்டபொழுது, அவள் மிகவும் சந்தோஷமடைந்தாள்.
“கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்தி விருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்” என்று பவுல் எழுதியுள்ளார் (எபே. 4:29). மற்றவர்களிடம் நாம் கூறும் நன்றியுள்ள வார்த்தைகள், நாமும் தேவனும் அவர்கள் மேல் வைத்துள்ள மதிப்பை அவர்களுக்கு நினைப்பூட்டுகிறது.
தியாகம் நிறைந்த விசுவாசம்
என்னுடைய கணவர் போதகராக உள்ள ஆலயத்தின் அருகில் எங்கள் வீடு உள்ளது. ஒரு ஞாயிற்றுகிழமை மத்தியான வேளையிலே, என் வீட்டு தோட்டத்தில் அமர்ந்தவாரு, ஆலயத்திலிருந்து பாரசீக மொழியில் மிதந்து வந்த துதி ஆராதனை சத்தத்தை கேட்டுக்கொண்டிருந்தேன். லண்டனில் உள்ள எங்கள் ஆலயத்தில் உற்சாகமிக்க ஈரானிய அங்கத்தினர் உள்ளனர். அவர்கள் எதிர்கொண்ட சில உபத்திரவங்களைப் பற்றி கேட்கும்பொழுது, கிறிஸ்துவின் மேலுள்ள அவர்களுடைய வாஞ்சையை அறிந்து கொள்ளலாம். அவற்றோடு ஒப்பிடும்பொழுது நாம் நம்மை சிறியவர்களாக எண்ணக்கூடும். உதாரணத்திற்கு, கிறிஸ்துவை விசுவாசித்ததினால் தன் உயிரைத் துறக்க நேர்ந்த தலைமைப் போதகருடைய சகோதரனின் தியாகம். இந்த உண்மையான விசுவாசிகள், முதலாவது இரத்தசாட்சியான ஸ்தேவானுடைய வழியை பின்பற்றுகிறார்கள்.
ஆதி திருச்சபையிலே முதலாவதாக நியமிக்கப்பட்ட ஊழியர்களில் ஒருவரான ஸ்தேவான், “பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும்” (அப். 6:8) செய்த பொழுது, எருசலேமிலே அநேகரால் கவனிக்கப்பட்டு, யூத அதிகாரிகள் முன்பு, தன்னுடைய செய்கைகளுக்கு விளக்கமளிக்குமாறு கொண்டு செல்லப்பட்டான். அவனை குற்றப் படுத்தியவர்களின் இருதய கடினத்தை விவரிக்கும் முன்பு, கிறிஸ்துவின் மேலுள்ள தன்னுடைய விசுவாசத்தைக் குறித்து உணர்ச்சிமிக்க விளக்கமளித்தான். அதைக்கேட்டு மனந்திரும்புவதற்கு பதிலாக அவர்கள் “மூர்க்கமடைந்து, அவனைப் பார்த்துப் பல்லை கடித்தார்கள்” (7:54). ஆத்திரமடைந்த அவர்கள் அவனை நகரத்திற்கு வெளியே இழுத்துக் கொண்டு வந்து கல்லெறிந்து கொன்று போட்டார்கள். அவனோ அப்பொழுதும் அவர்களை மன்னிக்குமாறு ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தான்.
கிறிஸ்துவின் சுவிசேஷம் மூர்க்கத்தனமான எதிர்ப்பை உண்டுபண்ணக் கூடும் என்பதை ஸ்தேவான் மற்றும் இன்றைய இரத்த சாட்சிகளின் கதைகள்மூலம் அறிந்து கொள்ளலாம். ஒருவேளை நம்முடைய விசுவாசத்தினிமித்தம் நாம் எந்த ஒரு எதிர்ப்பையும் எதிர்கொள்ளாமல் இருக்கலாம். ஆனால், இன்று உலகத்தில் உபத்திரவப்படும் சபைக்காக நாம் ஜெபிக்க வேண்டும்; ஒருவேளை நாமும் சோதிக்கப்பட்டால் நமக்காக எல்லா பாடுகளையும் அனுபவித்த கிறிஸ்துவின் முன்பு உண்மையுள்ளவர்களாய் நிற்க கிருபை பெறுவோமாக.
வானம் பார்ப்பவன்
வேலை ஸ்தலத்திலும், வீட்டிலும் உள்ள பிரச்சனைகளால் கவலையுற்ற மாட் (Matt), தன்னை ஆசுவாசப்படுத்தக் கொஞ்ச நேரம் வெளியில் சென்று நடந்து விட்டு வர முடிவு செய்தான். மாலை நேரத் தென்றல் வா என்றது. எல்லையற்ற வானம், நீல நிறத்திலிருந்து கருவண்ணமாக மாறிய பொழுது, அடர்ந்த பணிமூட்டம் நிலத்தின் மேல் படர்ந்தது. மின்ன ஆரம்பித்த நட்சத்திரங்கள் கிழக்கிலே உதிக்கும் சந்திரனின் வருகையை அறிவித்துக்கொண்டிருந்தன. அந்தத் தருணத்தை ஆவிக்குரிய ஒரு தருணமாக மாட் உணர்ந்தான். “அவர் அங்கு இருக்கிறார். தேவன் அங்கு இருக்கிறார். மேலும் இக்காரியங்களும் அவரிடம் உள்ளது” என்று எண்ணினான்.
சிலர் இரவிலே வானத்தைப் பார்க்கும்பொழுது, இயற்கையைத் தவிர வேறொன்றையும் காண்பதில்லை. வேறு சிலர் வெகு தூரத்தில் குளிரால் உறைந்துபோன வியாழன் கிரகத்தை (Jupiter) போலவே தேவனையும் பார்க்கின்றனர். ஆனால், “அவர் பூமி உருண்டையின் மேல் வீற்றிருக்கிறவர்” மற்றும் “அவைகளையெல்லாம் பேர்பேராக அழைக்கிறவராமே” (ஏசா. 40:22,26). அவர் அவருடைய படைப்புகள் அனைத்தையும் நன்கு அறிவார்.
நமக்கு சொந்தமான இந்த தேவன், “இஸ்ரவேலே: என் வழி கர்த்தருக்கு மறைவாயிற்று என்றும், என் நியாயம் என் தேவனிடத்தில் எட்டாமல் போகிறது என்றும் நீ சொல்வானேன்?” என்று தம்முடைய ஜனத்தைப் பார்த்துக் கேட்கிறார். அவர்களுக்காகப் பரிதவித்த தேவன், “இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ?... சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்” (வச. 27-29) என்று தம்மை தேடி வருபவர்கள் பெறும் பயனைக் குறித்து அவர்களுக்கு ஞாபகபடுத்துகிறார்.
நம்முடைய சோதனைகளினால் எளிதில் நாம் தேவனை மறந்துவிடுகிறோம். ஒரு மாலை நேரத்தில் நடப்பதினால் நம்முடைய பிரச்சனைகள் மறைந்து விடாது. ஆனால், தேவன் அவருடைய நன்மையான சித்தத்திற்கு நேராகவே நம்மை வழி நடத்துகிறார் என்கின்ற நிச்சயத்தை பெற்றவர்களாய் நாம் இளைப்பாறலாம். “நான் இங்கு தான் இருக்கிறேன். உன்னை தாங்கி பிடித்து கொண்டிருக்கிறேன்” என்று கூறுகிறார்.
எல்லையற்ற அன்பு
1900 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற பாக்ஸர் புரட்சியின் போது (Boxer Rebellion), டாய் யுன் ஃபு (T’ai Yuan Fu) என்பவரின் வீட்டில் சில மிஷனரி ஊழியர்கள் மாட்டிக் கொண்டனர். இவர்கள் உயிரை வாங்கும் வெறியோடு, இவர்களுக்கு எதிராக வெளியே கோஷமிட்டுக் கொண்டிருந்த கிளர்ச்சியாளர்களைப் பொருட்படுத்தாமல், தப்பியோடினால் மாத்திரமே உயிர் பிழைக்க முடியும் என்று அவர்கள் அறிந்தனர். அதனால் அவர்களிடம் இருந்த சில ஆயுதங்களை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர். அப்பொழுது ‘எடித் கூம்ஸ்’ (Edith Coombs) என்பவர் தன்னிடம் படிக்கும் இரண்டு சீன மாணவர்கள் ஆபத்தில் மாட்டி கொண்டிருப்பதைப் பார்த்து, திரும்பி ஓடி ஒரு மாணவனை பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்தில் விட்டு விட்டு மீண்டும் அடுத்த மாணவருக்காக வரும் போது தடுக்கி விழுந்த சமயத்தில் கொல்லப்பட்டார்.
இதே நேரத்தில் வேறு சில மிஷனரிகள் சின் சொவ் (Hsin Chou) மாவட்டத்தில் இருந்து தப்பித்து கிராமப்புறங்களில் ஒளிந்து கொண்டிருந்தனர். ஹோ சுயன் கொய்வி (Ho Tsuen Kwei) என்ற சீன நண்பர் அவர்களுக்குத் துணையாய் இருந்தார். அவர்கள் தப்பிச் செல்ல ஓர் மாற்று வழியை கண்டு பிடிக்க முயற்சி செய்தபோது ஹோ சுயன் கொய்வி கிளர்ச்சியாளர்களிடம் மாட்டிக் கொண்டார். அவர்கள் இருக்கும் இடத்தை காட்டிக் கொடுக்காததால் இவரும் கொல்லப்பட்டார்.
எடிட்த் கூம்ஸ் மற்றும் ஹோ சுயன் கொய்வி போன்றவர்களின் வாழ்க்கையை நாம் பார்க்கும் பொழுது, தேசப்பற்று, கலாச்சாரம் ஆகியவற்றை தாண்டிய ஓர் அன்பு எழும்புவதை நாம் காணலாம். மரணத்தை பொருட்படுத்தாமல் ஜீவ பலியாய் தங்களை ஒப்புக் கொடுத்த அவர்களது வாழ்க்கை நமது இரட்சகராகிய இயேசுவின் மகா கிருபையையும், அன்பையும் தான் நினைவூட்டுகிறது.
கைது செய்யப்பட்டு பின்னர் கொடூர மரணமடைவோம் என அறிந்தும் இயேசு கைதாவதற்காக காத்திருந்தார். அப்பொழுது “பிதாவே, உமக்கு சித்தமானால் இந்த பாத்திரம் என்னை விட்டு நீங்கும்படி செய்யும்” என்று ஜெபத்தில் மன்றாடிய அவர், கடைசியில் “ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது” (லூக். 22:42) என அவரது விண்ணப்பத்தை முடித்தார். அவரது வார்த்தையில் வீரமும், அன்பும், தியாகமும் மேலோங்கி நின்றது. அவர் மரித்து உயிர்தெழுந்ததினால் தான் நம்மால் நித்தியவாழ்வை அனுபவிக்க முடிகிறது.