1900ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற பாக்ஸர் புரட்சியின் போது (Boxer Rebellion), டாய் யுன் ஃபு (T’ai Yuan Fu) என்பவரின் வீட்டில் சில மிஷனரி ஊழியர்கள் மாட்டிக் கொண்டனர். இவர்கள் உயிரை வாங்கும் வெறியோடு, இவர்களுக்கு எதிராக வெளியே கோஷமிட்டுக் கொண்டிருந்த கிளர்ச்சியாளர்களைப் பொருட்படுத்தாமல், தப்பியோடினால் மாத்திரமே உயிர் பிழைக்க முடியும் என்று அவர்கள் அறிந்தனர். அதனால் அவர்களிடம் இருந்த சில ஆயுதங்களை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர். அப்பொழுது ‘எடித் கூம்ஸ்’ (Edith Coombs) என்பவர் தன்னிடம் படிக்கும் இரண்டு சீன மாணவர்கள் ஆபத்தில் மாட்டி கொண்டிருப்பதைப் பார்த்து, திரும்பி ஓடி ஒரு மாணவனை பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்தில் விட்டு விட்டு மீண்டும் அடுத்த மாணவருக்காக வரும் போது தடுக்கி விழுந்த சமயத்தில் கொல்லப்பட்டார்.

இதே நேரத்தில் வேறு சில மிஷனரிகள் சின் சொவ் (Hsin Chou) மாவட்டத்தில் இருந்து தப்பித்து கிராமப்புறங்களில் ஒளிந்து கொண்டிருந்தனர். ஹோ சுயன் கொய்வி (Ho Tsuen Kwei) என்ற சீன நண்பர் அவர்களுக்குத் துணையாய் இருந்தார். அவர்கள் தப்பிச் செல்ல ஓர் மாற்று வழியை கண்டு பிடிக்க முயற்சி செய்தபோது ஹோ சுயன் கொய்வி கிளர்ச்சியாளர்களிடம் மாட்டிக் கொண்டார். அவர்கள் இருக்கும் இடத்தை காட்டிக் கொடுக்காததால் இவரும் கொல்லப்பட்டார்.

எடிட்த் கூம்ஸ் மற்றும் ஹோ சுயன் கொய்வி போன்றவர்களின் வாழ்க்கையை நாம் பார்க்கும் பொழுது, தேசப்பற்று, கலாச்சாரம் ஆகியவற்றை தாண்டிய ஓர் அன்பு எழும்புவதை நாம் காணலாம். மரணத்தை பொருட்படுத்தாமல் ஜீவ பலியாய் தங்களை ஒப்புக் கொடுத்த அவர்களது வாழ்க்கை நமது இரட்சகராகிய இயேசுவின் மகா கிருபையையும், அன்பையும் தான் நினைவூட்டுகிறது.

கைது செய்யப்பட்டு பின்னர் கொடூர மரணமடைவோம் என அறிந்தும் இயேசு கைதாவதற்காக காத்திருந்தார். அப்பொழுது “பிதாவே, உமக்கு சித்தமானால் இந்த பாத்திரம் என்னை விட்டு நீங்கும்படி செய்யும்” என்று ஜெபத்தில் மன்றாடிய அவர், கடைசியில் “ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது” (லூக். 22:42) என அவரது விண்ணப்பத்தை முடித்தார். அவரது வார்த்தையில் வீரமும், அன்பும், தியாகமும் மேலோங்கி நின்றது. அவர் மரித்து உயிர்தெழுந்ததினால் தான் நம்மால் நித்தியவாழ்வை அனுபவிக்க முடிகிறது.