Archives: அக்டோபர் 2016

படிப்படியாக

வேதாகமத்திலுள்ள எண்ணாகமம் 33ம் அதிகாரத்தை ஆழ்ந்த சிந்தனை எதுவுமில்லாமல் நாம் வாசிக்கலாம். இஸ்ரவேல் மக்கள் எகிப்திலுள்ள ராமசேஸ் பட்டணத்தை விட்டு, மோவாப் சமவெளியை அடையும் வரை அவர்கள் கடந்து வந்த இடங்களின் பட்டியலைத்தவிர, வேறு ஏதும் அந்த அதிகாரத்தில் இல்லை. ஆனால், அப்பகுதி மிக முக்கியமானதாக கருதப்பட வேண்டும். ஏனென்றால் இந்த ஒரு பகுதி மட்டும்தான் “மோசே தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே… எழுதினான்” (வச. 2) என்ற வார்த்தைகளுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஏன் இப்படியான குறிப்புகளை பதிவு செய்து வைக்க வேண்டும்? வனாந்தரத்தில் 40 ஆண்டுகளாக பயணம் செய்த இஸ்ரவேல் மக்கள், அவர்கள் கடந்து வந்த இடங்களையும், அந்தந்த இடங்களில், தேவன் அவர்களுக்கு உண்மையுள்ளவராக இருந்து, செய்த நன்மைகளையும், அவர்களது மனதில் நினைத்துப் பார்ப்பதற்கு அந்தக் குறிப்புகள் உதவியாக இருக்கும்.

ஒரு கூடாரத்திற்கு வெளியே திறந்த வெளியில் மூட்டப்பட்ட நெருப்பின் அருகில் ஓர் இஸ்ரவேல் தகப்பனார் அமர்ந்து, அவருடைய மகனிடம், “ரெவிதீமை என்னால் மறக்கவே இயலாது! அங்கு நூற்றுக்கணக்கான மைல்களுக்கு எங்கு பார்த்தாலும் மணலும், வறண்ட பிரதேச தாவரங்கள்தான் இருந்தன. நான் தாகத்தால் செத்துக்கொண்டிருந்தேன். பின்பு தேவன், மோசேயிடம் அவனது கோலை ஓங்கி கன்மலையை அடிக்கும்படி கூறினார். அது ஒரு கருங்கல் பாறை. மோசே அதை அடித்தது ஒரு பயனற்ற செயல். அந்தக் கடினமான கல்லிலிருந்து எதையும் பெற்றுக்கொள்ள இயலாது. ஆனால், என்ன ஆச்சரியம்! அந்தக் கன்மலையிலிருந்து தண்ணீர் பீறிட்டு வந்தது. பல்லாயிரக்கணக்கான இஸ்ரவேல் மக்களின் தாகத்தைத் தீர்க்குமளவிற்கு அதிகமான தண்ணீர் அதிலிருந்து வந்தது. அந்த நாளை என்னால் மறக்கவே இயலவில்லை” (சங். 114:8; எண். 20:8–13; 33:14 பார்க்க) என்று அந்த தகப்பனார், அவர் கடந்து வந்த இடங்களில் நடந்தவற்றை மறுபடியும் நினைவில் கொண்டுவந்து கூறுவதாக நான் என் மனதில் கற்பனை பண்ணுகிறேன்.

ஆகவே நீங்களும் ஏன் இந்தவித முயற்சியை எடுக்கக்கூடாது? உங்களது வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் நடந்த காரியங்களை நினைவு கூர்ந்து, தேவன் வாக்குப்பண்ணின அவரது அன்பை உண்மையாக உங்கள் மீது ஒவ்வொரு நிலைமையிலும் காண்பித்து நடத்தி வந்ததை நினைவு கூறுங்கள்.

இருதயங்களை சீர்செய்தல்

சமீபத்தில், சில ஆடைகளை சரிசெய்ய துணிதைக்கும் ஒரு பெண்ணின் கடைக்குச் சென்றேன். நான் அக்கடையில் நுழையும் பொழுது அதன் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த பதாகைகளை பார்த்தவுடன் நான் மிகவும் உற்சாகமடைந்தேன். அந்தப் பதாகைகள் ஒன்றில் “நாங்கள் உங்கள் ஆடைகளை சரிசெய்வோம், ஆனால் உங்கள் இருதயத்தை கடவுளால் மட்டும் தான் சரிசெய்ய இயலும்” என்று எழுதப்பட்டிருந்தது. அதன் அருகில் உயிர்த்தெழுந்த இயேசு, அழுதுகொண்டிருந்த மகதலேனா மரியாளுக்கு கொண்டிருந்த காட்சி சித்தரிக்கப்பட்டிருந்தது. மற்றொரு பதாகையில் “ஜெபம் உங்களுக்கு தேவைப்படுகிறதா? நாங்கள் உங்களுடன் சேர்ந்து ஜெபிக்கிறோம்” என்று குறிக்கப்பட்டிருந்தது.

அந்தக் கடைக்கு சொந்தக்காரப் பெண் அந்தக் கடையை 15 ஆண்டுகளாக நடத்தி வருவதாகக் கூறினாள். “இங்கு பல்வேறு இடங்களில் குறிக்கப்பட்டுள்ள விசுவாச வார்த்தைகளால் தேவன் எப்படியாகக் கிரியை செய்துள்ளார் என்பதை அறிந்து ஆச்சரியப்படுகிறோம். சிறிது நாட்களுக்கு முன்பாக, இதே இடத்தில் ஒருவர் கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டுள்ளார். தேவன் கிரியை செய்வதை பார்க்கும்பொழுது, மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது” என்று கூறினாள். நானும் ஒரு கிறிஸ்தவன் என்று அவளிடம் கூறி, அவள் பணி செய்யும் இடத்தில் இப்படியாக கிறிஸ்துவை அறிவித்து வருவதைக் குறித்து பாராட்டினேன்.

நாம் அனைவருமே நாம் பணிசெய்யும் இடங்களில் அந்த தையல்கார பெண்மணியைப்போல தைரியமாக செயல்பட இயலாது. ஆனால் பிறர் எதிர்பாராத முறையில் அவர்களிடம் அன்பு, பொறுமை, இரக்கம் காண்பிப்பதன் மூலம் புதிய செயல்முறைத் திட்டங்களை நாம் கண்டறியலாம். அந்த தையல் கடையை விட்டுவந்ததிலிருந்து, “நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்” (மத். 5:14) என்று இயேசு கூறினதை வாழ்ந்து காண்பிக்க எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன என்பது பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

இந்த வரம்

நான் சேகரித்து வைத்திருந்த பிரம்புகள், தடிகள், கைத்தடிகள் பற்றி அநேக ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு கட்டுரை எழுதினேன். அவற்றை நான் பயன்படுத்த வேண்டிய காலம் வரும் என்று எனக்குள் நானே சிந்தித்தேன். அந்த நாளும் வந்தது. முதுகில் ஏற்பட்ட பிரச்சனையுடன் கூட நரம்புத்தளர்ச்சியும் சேர்ந்து, மூன்று சக்கரங்களையுடைய நடக்க பயன்படும் உபகரணத்தை (Walker) பயன்படுத்தக்கூடிய சூழ்நிலை எனக்கு ஏற்பட்டது. என்னால் நீண்ட தூர நடைப்பயிற்சி செய்ய இயலாது; மீன் பிடிக்க இயலாது; எனக்கு மகிழ்ச்சியை அளித்த அநேக செயல்களை என்னால் செய்ய இயலாது.

என்னுடைய செயல்பாடுகள் குறிப்பிட்ட எல்லைக்குள் உட்பட்டு இருந்தாலும், அவை அனைத்தும் தேவன் எனக்கு அருளிய வரங்கள் என்றும், அந்த வரங்களோடு நான் தேவனுக்கு ஊழியம் செய்ய வேண்டுமென்பதையும் கற்றுக்கொண்டு வருகிறேன். தேவன் எனக்கு அளித்துள்ளது இந்த வரம்தான், மற்றப்படி வேறு வரம் அல்ல. நமது செயல்களை எல்லைக்கு உட்படுத்தும் இந்தக் காரியங்கள் - நமது உணர்வுகள் சார்ந்ததாகவோ, சரீரப்பிரகாரமானதாகவோ அல்லது அறிவாற்றல் சார்ந்ததாகவோ இருக்கலாம். இது நம் அனைவருக்கும் பொருந்தக்கூடியது. பவுல் அவரது பலவீனத்தில் தேவனுடைய வல்லமை அவர்மேல் தங்கத்தக்கதாக அவருடைய பலவீனங்களைக் குறித்து மேன்மை பாராட்டுவேன் என்று தைரியமாகக் கூறினார் (2 கொரி. 12:9).

நம்முடைய குறைகளை இந்தக் கண்ணோட்டத்தில் நாம் பார்ப்பது, நமது செயல்பாடுகளை நம்பிக்கையோடும், தைரியத்தோடும் செயல்படுத்த உதவுகிறது. நமது குறைபாடுகளை எண்ணி குறைவுபடவோ, சுயபரிதாபமடையவோ விட, அவைகளின்று அவருடைய சித்தத்தை நம்மில் நிறைவேற்ற நம்மை அவரிடம் ஒப்புக்கொடுப்போம்.

உங்களைக் குறித்தோ, என்னைக் குறித்தோ தேவன் என்ன சித்தம் கொண்டுள்ளார் என்று தெரியாது. ஆனால், அது குறித்து நாம் கவலைப்படக்கூடாது. காரியங்களை இருக்கிற வண்ணமாகவே ஏற்றுக்கொண்டு அதில் திருப்தியாக இருந்து, அன்பில், ஞானத்தில், தேவன் அருளும் காரியங்கள் அனைத்திலும் இந்த நிமிடம் மிகச் சிறந்ததாகவே இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதே இன்று நாம் செய்ய வேண்டிய காரியமாகும்.

மாற்றத்தை தேர்ந்தெடுத்தல்

எனது மகனுக்கு ஒரு சிறிய ரோபோ கிடைத்தபொழுது, அவன் விரும்பின சிறிய, சிறிய வேலைகள் செய்யத்தக்கதாக அதை திட்டமிட்டு அமைத்தது அவனுக்கு நல்ல பொழுதுபோக்காக இருந்தது. அந்த ரோபோவை முன்புறமாக நடக்கவைக்க, நடப்பதை நிறுத்த, பின்நோக்கி நடக்கவைக்க அவனால் முடிந்தது. அது பீப் ஒலி எழுப்பவோ அல்லது ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஒலியை திரும்பக்கூறவோ வைத்தான். என் மகன் கூறினபடியே அந்த ரோபோ எல்லாவற்றையும் செய்தது. ஆனால், இயற்கையாக சிரிக்கவோ அல்லது ஏற்கனவே திட்டமிடப்படாத திசையில் திரும்பவோ அதனால் இயலாது. ஏற்கனவே திட்டமிட்டவைகளைத் தவிர வேறு எந்த செயலையும் அதனால் செய்ய இயலாது.

தேவன் மனிதர்களை சிருஷ்டித்த பொழுது, (அவர்களை) ரோபோக்களைப்போல சிருஷ்டிக்கவில்லை. தேவன் அவருடைய சாயலில் நம்மை சிருஷ்டித்தார். அதனால் நாம் சிந்தித்து செயலாற்றலாம். நாமே தீர்மானங்களை எடுக்கலாம். நன்மை எது, தீமை எது என்பதை நாம் அறிந்து தேர்ந்தெடுக்கலாம். தேவனுக்கு கீழ்ப்படியாத தன்மையை நாம் பழக்கப்படுத்தியிருந்தாலும் கூட, நமது வாழ்க்கையை மறுபடியும் திருத்திக்கொள்ள நம்மால் தீர்மானம் எடுத்துக்கொள்ள இயலும்.

தேவனுடைய வழிகளில் நடப்பதைவிட்டு, இஸ்ரவேல் புத்திரர் வழிதவறினபொழுது, எசேக்கியேல் தீர்க்கதரிசியின் மூலம் தேவன் பேசினார். “நீங்கள் மனந்திரும்புங்கள், உங்களுடைய எல்லா மீறுதல்களையும் விட்டுத் திரும்புங்கள்; அப்பொழுது அக்கிரமம் உங்கள் கேட்டுக்குக் காரணமாயிருப்பதில்லை… புது இருதயத்தையும் புது ஆவியையும் உண்டுபண்ணிக்கொள்ளுங்கள்” (எசே. 18:30–31) என்று எசேக்கியேல் கூறினார்.

இப்படிப்பட்ட மாற்றம், நாம் தேர்ந்தெடுக்கும் ஒரு காரியத்தின் மூலமாக ஆரம்பிக்கப்பட்டு பரிசுத்தாவியின் வல்லமையினால் செயல்படுகிறது (ரோம. 8:13). மிகவும் நெருக்கடியான நேரத்தில் தேவையற்ற தேர்ந்தெடுத்தலை தவிர்க்கவேண்டிய நிலையாகும். வம்பு வார்த்தைகள் கிடையாது, பேராசை கிடையாது, பொறாமை கிடையாது ______________ (கோடிட்ட இந்த இடத்தில் நீங்கள் விடவேண்டும் என்று நினைக்கிற காரியங்களை நிரப்பிக்கொள்ளுங்கள்). நீங்கள் இயேசுவை அறிந்திருந்தீர்களானால் நீங்கள் பாவத்திற்கு அடிமைகளல்ல. நீங்கள் மாறுவதற்கான காரியங்களை தேவனுடைய உதவியோடு தேர்ந்தெடுக்கலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் செய்ய வேண்டிய மாற்றத்தை இன்றே துவங்கலாம்.

நான் உன்னோடு இருக்கிறேன்

ஒரு கிறிஸ்தவப் பத்திரிக்கைக்கு இளநிலை உதவியாளராக நான் பணியாற்றி வந்தபொழுது, கிறிஸ்தவனாக மாறின ஒருவரைப்பற்றிய கதையை அதில் எழுதினேன். ஆச்சரியப்படத்தக்க விதமாக, அவன் அவனது பழைய வாழ்க்கையை முற்றிலுமாக விட்டுவிட்டு, இயேசுவை அவனுடைய புதிய எஜமானாக ஏற்றுக்கொண்டான். அந்தப் பத்திரிக்கை வெளியான சில நாட்களில், “டார்மனி, ஜாக்கிரதையாக இருங்கள், நாங்கள் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம். இப்படிப்பட்ட கதைகளை நீங்கள் எழுதினால், இந்த ஊரில் உங்கள் உயிருக்கு ஆபத்துள்ளது,” என்று பெயர் அறிவிக்கப்படாத ஒருவர் என்னை தொலைபேசியில் கூப்பிட்டு பயமுறுத்தினார்.

மக்களுக்கு கிறிஸ்துவை அறிவித்ததினால் நான் பயமுறுத்தப்பட்டது, அது முதல் தடவை அல்ல. ஒருமுறை நான் கிறிஸ்துவைப் பற்றிய கைப்பிரதியை, ஒரு மனிதனிடம் கொடுத்தபொழுது உடனே என் கைப்பிரதிகளோடே ஓடிவிடாவிட்டால் விளைவுகள் வேறாக இருக்குமென்று அவன் பயமுறுத்தினான். அந்த இரு தடவைகளிலும் நான் பயத்தினால் பின் வாங்கினேன். ஆனால், இவை வார்த்தைகளினால் உண்டாக்கப்பட்ட பயமுறுத்தல்கள்தான். அநேக கிறிஸ்தவர்கள் இப்படிப்பட்ட பயமுறுத்தல்களை சந்தித்து வருகின்றனர். சில சமயங்களில் மிகச் சாதாரணமாக தெய்வ பக்தியுள்ள வாழ்க்கையை நடத்துவதுகூட மக்களிடம் எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியதுள்ளது.

“நான் உன்னை அனுப்புகிற எல்லாரிடத்திலும் நீ போய், நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளை யெல்லாம் நீ பேசுவாயாக” (எரே. 1:7) என்று கர்த்தர் எரேமியாவிடம் கூறினார். இயேசுவும் சீஷர்களிடம் “ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்” (மத். 10:16) என்று கூறினார். ஆம், நாம் பயமுறுத்தல்களையும், வாழ்க்கைப் பிரச்சனைகளையும், துன்புறுத்தல்களையும், வேதனைகளையும் கூட அனுபவிக்கலாம். ஆனால் “நான் உன்னுடனே இருக்கிறேன்”(எரேமியா 1:8) என்று தேவன் எரேமியாவிடம் உறுதிபடக் கூறுகிறார். அப்படியே இயேசுவும் “சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” (மத். 28:20) என்று அவரைப் பின்பற்றினவர்களிடம் உறுதியுடன் கூறினார்.

கர்த்தருக்காக வாழ நாம் முயற்சி எடுக்கும்பொழுது, எந்த விதமான கஷ்டங்களை சந்தித்தாலும் கர்த்தருடைய பிரசன்னம் எப்பொழுதும் நம்முடன் கூட இருக்கிறது என்பதை நாம் நம்பலாம்.