வேதாகமத்திலுள்ள எண்ணாகமம் 33ம் அதிகாரத்தை ஆழ்ந்த சிந்தனை எதுவுமில்லாமல் நாம் வாசிக்கலாம். இஸ்ரவேல் மக்கள் எகிப்திலுள்ள ராமசேஸ் பட்டணத்தை விட்டு, மோவாப் சமவெளியை அடையும் வரை அவர்கள் கடந்து வந்த இடங்களின் பட்டியலைத்தவிர, வேறு ஏதும் அந்த அதிகாரத்தில் இல்லை. ஆனால், அப்பகுதி மிக முக்கியமானதாக கருதப்பட வேண்டும். ஏனென்றால் இந்த ஒரு பகுதி மட்டும்தான் “மோசே தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே… எழுதினான்” (வச. 2) என்ற வார்த்தைகளுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஏன் இப்படியான குறிப்புகளை பதிவு செய்து வைக்க வேண்டும்? வனாந்தரத்தில் 40 ஆண்டுகளாக பயணம் செய்த இஸ்ரவேல் மக்கள், அவர்கள் கடந்து வந்த இடங்களையும், அந்தந்த இடங்களில், தேவன் அவர்களுக்கு உண்மையுள்ளவராக இருந்து, செய்த நன்மைகளையும், அவர்களது மனதில் நினைத்துப் பார்ப்பதற்கு அந்தக் குறிப்புகள் உதவியாக இருக்கும்.

ஒரு கூடாரத்திற்கு வெளியே திறந்த வெளியில் மூட்டப்பட்ட நெருப்பின் அருகில் ஓர் இஸ்ரவேல் தகப்பனார் அமர்ந்து, அவருடைய மகனிடம், “ரெவிதீமை என்னால் மறக்கவே இயலாது! அங்கு நூற்றுக்கணக்கான மைல்களுக்கு எங்கு பார்த்தாலும் மணலும், வறண்ட பிரதேச தாவரங்கள்தான் இருந்தன. நான் தாகத்தால் செத்துக்கொண்டிருந்தேன். பின்பு தேவன், மோசேயிடம் அவனது கோலை ஓங்கி கன்மலையை அடிக்கும்படி கூறினார். அது ஒரு கருங்கல் பாறை. மோசே அதை அடித்தது ஒரு பயனற்ற செயல். அந்தக் கடினமான கல்லிலிருந்து எதையும் பெற்றுக்கொள்ள இயலாது. ஆனால், என்ன ஆச்சரியம்! அந்தக் கன்மலையிலிருந்து தண்ணீர் பீறிட்டு வந்தது. பல்லாயிரக்கணக்கான இஸ்ரவேல் மக்களின் தாகத்தைத் தீர்க்குமளவிற்கு அதிகமான தண்ணீர் அதிலிருந்து வந்தது. அந்த நாளை என்னால் மறக்கவே இயலவில்லை” (சங். 114:8; எண். 20:8–13; 33:14 பார்க்க) என்று அந்த தகப்பனார், அவர் கடந்து வந்த இடங்களில் நடந்தவற்றை மறுபடியும் நினைவில் கொண்டுவந்து கூறுவதாக நான் என் மனதில் கற்பனை பண்ணுகிறேன்.

ஆகவே நீங்களும் ஏன் இந்தவித முயற்சியை எடுக்கக்கூடாது? உங்களது வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் நடந்த காரியங்களை நினைவு கூர்ந்து, தேவன் வாக்குப்பண்ணின அவரது அன்பை உண்மையாக உங்கள் மீது ஒவ்வொரு நிலைமையிலும் காண்பித்து நடத்தி வந்ததை நினைவு கூறுங்கள்.