நாம் ஒரு குழப்பமான சூழ்நிலையையோ அல்லது கடினமான பிரச்சனையையோ எதிர்கொள்ளும் பொழுது, அநேகந்தரம், கிறிஸ்துவுக்குள் உள்ள நம் சகோதர, சகோதரிகளிடம் நமக்காக ஜெபிக்கக் கேட்போம். நம்மேல் அக்கறைகொண்டவர்கள் தங்களுடைய ஜெபத்தினாலே நம்மை தாங்கி தேவனிடம் கொண்டு செல்கிறார்கள் என்பதை அறியும் பொழுது, நமக்கு மிகப்பெரிய ஆறுதலாயிருக்கிறது. ஆனால், உங்களுக்கு நெருங்கிய கிறிஸ்தவ நண்பர்கள் இல்லையென்றால் என்ன செய்வது? ஒருவேளை நீங்கள் வாழும் இடத்தில் கிறிஸ்துவின் நற்செய்தியை எதிர்க்கலாம். ஆகவே, யார் உங்களுக்காக ஜெபிப்பார்கள்?
வேதத்தில், வெற்றியை அறிவிக்கும் மகத்தான அதிகாரங்களில் ஒன்றான ரோமர் 8ஆம் அதிகாரத்தில், “நாம் ஏற்றப்படி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமல் இருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார். ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியால்” (ரோ. 8: 26-27) என அறிவிக்கிறார். பரிசுத்த ஆவியானவர் தாமே இன்று உங்களுக்காக ஜெபித்துக்கொண்டிருக்கிறார்.
அதுமட்டுமல்லாது, “கிறிஸ்துவே மரித்தவர், அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே” (வச. 34). ஜீவனுள்ள தேவனாகிய இயேசு கிறிஸ்துவும் இன்று உங்களுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறார்.
யோசித்துப் பாருங்கள்! ஆவியானவரும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும், உங்கள் பெயரையும், தேவைகளையும் பிதாவாகிய தேவனிடத்தில் கூறுகிறார்கள். அவரும் அதைக் கேட்டு உங்கள் சார்பில் செயல்படுகிறார்.
நீங்கள் எங்கிருந்தாலும், அல்லது மிகக் குழப்பமான சூழ்நிலையில் இருந்தாலும், உங்கள் வாழ்வை நீங்கள் தனியாய் எதிர்கொள்வதில்லை. ஆவியானவரும், குமாரனும் இன்று, உங்களுக்காக ஜெபித்துக்கொண்டிருக்கிறார்கள்!