என்னுடைய தோழியின் தகப்பனாருடைய நினைவுநாள் ஜெபக்கூட்டத்தில், “உன் தந்தையை சந்திக்கும் வரையில் மற்றவர்களுக்கு உதவும் பொழுதுகூட ஒருவரால் உற்சாகமாயும், சந்தோஷமாயும் இருக்க முடியும் என்பதை அறியாதிருந்தேன்”, என்று ஒருவர் அவளிடம் கூறினார். மற்றவர்களுக்கு சேவை செய்வதின் மூலமும், அன்பையும், களிப்பையும் பகிர்ந்தும், முன்பின் அறியாதவர்களை சந்தித்து நட்பு பாராட்டுவதின் மூலமும், அவளுடைய தந்தை தேவனுடைய ராஜ்ஜியத்தைக் கட்ட அவரது பங்களித்தார். அவர் மரித்த பொழுது அன்பை பரம்பரை சொத்தாக விட்டுச்சென்றார். அதற்கு எதிர்மறையாக என் தோழியின் அத்தையோ, அதாவது அவள் தந்தையின் சகோதரி, அவருடைய உடைமைகளையே தன் பரம்பரை சொத்தாக எண்ணினார். அதனாலேயே தன்னுடைய கடைசி நாட்களை, அப்பாரம்பரிய உடைமைகளையும், அரிய புத்தகங்களையும் இனி யார் பாதுகாப்பார்கள் என்ற கவலையிலேயே கழித்தார்கள்.
இயேசு, அவருடைய போதனைகளின் மூலமும், மாதிரியாக வாழ்ந்துகாட்டியதின் மூலமும், தன்னைப் பின்பற்றுகிறவர்களைப் பார்த்து தங்களுக்கென்று பொக்கிஷங்களை சேர்க்காமல், ஏழைகளுக்கு கொடுக்கவும், அழிந்தும், பழைமையுமாய் ஆகக்கூடியவற்றின் மேல் தங்கள் மனதை வைக்காமலிருக்குமாறு எச்சரிக்கிறார். “உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்” என்று இயேசு கூறுகிறார் (லூக். 12:34).
நம்முடைய வாழ்விற்கு பொருட்கள் ஏதோவொரு வகையில் அர்த்தம் கொடுப்பதாய் நாம் நினைக்கலாம். ஆனால், மிக சமீபத்தில் வாங்கிய ஒரு சாதனம் உடைந்து போனாலோ அல்லது தவறுதலாய் விட்டுவிட்டாலோ, இல்லை தொலைந்து போனாலோ, அப்பொழுதுதான், தேவனோடுள்ள நம்முடைய உறவே நிரந்தரமானதும், நம்மை திருப்திபடுத்துகிறதுமாயிருக்கிறது என்பதை உணர ஆரம்பிக்கிறோம். மற்றவர்களுக்கு நாம் காட்டும் அன்பும் கரிசனையுந்தான் உலர்ந்து போவதோ, மங்கிப்போவதோ இல்லை.
நாம் எதை மதிப்புமிக்கதாய் எண்ணுகிறோம் என்பதை தெளிவாய்க் காணவும், நம்முடைய இருதயம் எவ்விடம் உள்ளது என்பதை கண்டுகொள்ளவும் எல்லாவற்றிற்கும் மேலாக அவருடைய ராஜ்ஜியத்தைத் தேட உதவிடுமாறும் தேவனிடம் மன்றாடுவோம் (12:31).