நாம் தேர்ச்சிபெற நினைக்கும் காரியங்களில், அநேகமாக இச்சையடக்கமே கடினமான ஒன்றாக இருக்கக்கூடும். எத்தனை முறைகள் ஒரு மோசமான பழக்கவழக்கத்தினால் அல்லது மட்டமான மனப்பான்மையினால் இல்லையெனில் தவறான மனப்போக்கினால் நாம் தோற்கடிக்கப்பட்டிருக்கிறோம். நாம் மனந்திரும்பும்படி உறுதிமொழி எடுக்கிறோம். யாரையாவது நமக்கு பொறுப்பாளியாக நாம் கணக்கொப்புவிக்கும்படியாக இருக்கக் கேட்கிறோம். ஆனால் நாம் மனம் மாற தேவையான பெலனோ, திறனோ நமக்கு இல்லை என்பது நமது உள்ளத்தின் ஆழத்திலே நமக்குத் தெரியும். நாம் அதைக்குறித்து பேசலாம், திட்டமிடலாம், சுய உதவி புத்தகங்கள் வாசிக்கலாம். ஆனால், நமக்குள் இருக்கும் வேண்டாத சில காரியங்களை அடக்கவோ, மேற்கொள்ளவோ சிரமப்படுகிறோம்.
நல்லவேளை! தேவன் நம்முடைய பெலவீனங்களை மாத்திரம் அல்ல, அதற்குரிய தீர்வையும் அறிந்திருக்கிறார். “ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்” என வேதாகமம் கூறுகிறது (கலா. 5:22-23). இச்சையடக்கத்தை பெற்றுக்கொள்ள ஒரே வழி, ஆவியானவரின் ஆளுகைக்குள் நம்மை ஒப்புக்கொடுப்பதே.
வேறு விதமாய் சொல்ல வேண்டுமானால், நம்முடைய பிரதான நோக்கம், முயற்சி அல்ல, ஒப்புக்கொடுத்தல். அதாவது ஒவ்வொரு கணமும் நம்முடைய சுய பெலத்தின் மேல் சாராமல் தேவன் மேல் நம்பிக்கை வைத்து அவருக்கு பணிந்து வாழ்வதே. இதைத்தான் பவுல் “ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுதல்” (வச. 16) என்று கூறுகிறார்.
ஒரு மாற்றத்திற்கு நீங்கள் தயாரா? தேவன் உங்களுக்குள் இருப்பதினால், உங்களால் மாற முடியும். அவருடைய ஆளுமைக்குள் உங்களை அர்ப்பணித்தால், அவரைப் போலவே நீங்களும் கனி கொடுக்கும்படியாய் உங்களுக்கு உதவி செய்வார்.