பள்ளியிலிருந்து வீடு திரும்பிய என்னுடைய மகன் ஒரு தாளை என்னிடம் காண்பித்த பொழுது, அவனுடைய நீல நிற கண்கள் உற்சாகத்தால் மின்னியது. அது அவனுடைய கணக்கு தேர்வுத்தாள். அதில் சிவப்பு நட்சத்திரம் ஒன்று குறிக்கப்பட்டிருந்தது. ஏனெனில் அவன் நூறு மதிப்பெண்கள் பெற்றிருந்தான். நாங்கள் அந்த விடைத்தாளைப் பார்த்து கொண்டிருந்த நேரத்தில், அத்தேர்வு நேரம் முடிந்தது என்று தன் ஆசிரியர் கூறின பொழுது தான் மூன்று கேள்விகளுக்கு இன்னும் பதிலளிக்காததைச் சொன்னான். அதைக்கேட்டு குழம்பி, பிறகு முழு மதிப்பெண் எப்படி கிடைக்கக்கூடும் என வினவினேன். அதற்கு அவன் “என் ஆசிரியர் எனக்கு கிருபையளித்தார். நேரம் முடிந்தபோதிலும் தேர்வை முழுதும் எழுதி முடிக்க அனுமதித்தார்” என்றான்.

நானும், எனது மகனும் கிருபையின் அர்த்தத்தை குறித்து கலந்து பேசிக்கொண்டிருந்த பொழுது,  தேவன் நம்முடைய தகுதிக்கு மேலாக கிறிஸ்து மூலமாய் நமக்கு தந்தருளியுள்ளார் என்பதை சுட்டிக்காட்டினேன். நம்முடைய பாவத்தினிமித்தம் மரணமே நமக்குரிய பங்காய் இருக்கிறது (ரோம. 3:23). ஆயினும்,  “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்தாரே” (ரோம. 5:8). நாம் தகுதியற்றவர்களாய் இருந்தோம். ஆனாலும் நாம் பாவத்தின் தண்டனையிலிருந்து தப்பித்து என்றென்றைக்கும் பரலோகத்தில் வாழ்வதற்காக,  பாவமற்ற, பரிசுத்தமான இயேசு நமக்காக அவருடைய ஜீவனையே தந்தருளினார்.

நித்திய வாழ்வு தேவனுடைய ஈவு. அது நாம் உழைத்து சம்பாதிக்கக் கூடிய ஒன்றல்ல. நாம் கிருபையினாலே கிறிஸ்து இயேசுவுக்குள் விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டோம் (எபே. 2:8-9).