ஒலௌடா யூக்கியானோ (1745–1796) 11 வயதாக இருந்தபொழுது கடத்தப்பட்டு அடிமையாக விற்கப்பட்டான். மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து மேற்கிந்தியத் தீவுகளுக்கும், வெர்ஜினியா காலனிக்கும், அங்கிருந்து இங்கிலாந்துக்குமான பயங்கரமான வேதனை நிறைந்த பயணத்தை மேற்கொண்டான். அவனது 20வது வயதில் பணம் கொடுத்து, அவன் தன் விடுதலையை வாங்கினான். மனிதாபிமானமற்ற முறையில் அவன் நடத்தப்பட்டிருந்ததினால் அவன் இன்னமும் உணர்ச்சிபூர்வமான, சரீரப்பிரகாரமான தழும்புகளை தாங்கிக் கொண்டிருந்தான்.
அவனுடன் சேர்ந்த மற்ற மக்கள் இன்னமும் அடிமைத்தனத்தில் இருந்ததால் அவன் பெற்ற விடுதலையின் நிமித்தம் அவன் மகிழ்ச்சியடைய இயலாமல், இங்கிலாந்தில் அடிமைத்தனத்தை ஒழிக்கும் இயக்கத்தில் யூக்கியானோ மிகுந்த ஈடுபாடுடன் பங்கெடுத்தான். அவன், அவனது சுயசரிதையை எழுதினான், (அவன் வாழ்ந்த காலத்தில் அடிமையாக இருந்த ஒருவன் புத்தகம் எழுதினது நம்பமுடியாத வெற்றியாகும்) அப்புத்தகத்தில் அடிமைகள் எவ்விதமாக கொடுமையாக நடத்தப்படுகிறார்கள் என்பதை விவரித்திருந்தான்.
இயேசு உலகத்திற்கு வந்தபொழுது, பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து நம்மை நாமே மீட்டுக்கொள்ள இயலாத நிலைமையில் இருந்த நம் அனைவருக்காகவும் அவர் போராடினார். நம்முடைய அடிமைத்தனம் வெளிப்படையான சங்கிலியினால் கட்டப்பட்டதல்ல. நாம் செய்த, நமது குற்றங்களினாலும், பாவங்களினாலும் கட்டப்பட்டிருக்கிறோம்.
“பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான்; அடிமையானவன் என்றைக்கும் வீட்டிலே நிலைத்திரான்; குமாரன் என்றைக்கும் நிலைத்திருக்கிறார். ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்” (யோவா. 8:34–36) என்று இயேசு கூறினார்.
எங்கெல்லாம் இந்த விடுதலையின் செய்தி அறிவிக்கப்படவில்லையோ, அங்கெல்லாம் தேவனுடைய வார்த்தைகள் அறிவிக்கப்பட வேண்டும். நமது குற்ற உணர்வு, அவமானம், நம்பிக்கையற்ற நிலைமை இவற்றிலிருந்து நாம் விடுதலை பெறலாம். இயேசுவை நம்புவதன் மூலமாக உண்மையாகவே நாம் விடுதலை அடைகிறோம்.