அனுதினமும் எனது வேலையைச் செய்ய தொழில் நுட்பக்கருவிகளையே சார்ந்திருந்தாலும், அவைகள் எப்படி வேலை செய்கின்றன என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. கணினியை இயக்கி வார்த்தைகளின் அட்டவணையைப் (Word Document) பெற்று எழுதும் வேலையை நான் ஆரம்பிக்கிறேன். ஆனால் கணினியிலுள்ள சிலிகான் சில்லுகள் மைக்ரோசில்லுகள் (Micro Chips), கணினியில் பயன்படுத்தும் தரவுகளை நிலையாகத் தேக்கி வைக்கும் வன்தட்டுகள் (Hard disk), வை- ஃபை இணைப்புகள் அல்லது கணினியில் தோன்றும் பலவண்ணக் காட்சிகள் காட்டும் திரை (full color display) இவைகளெல்லாம் எப்படி வேலை செய்கின்றனவென்று என்னால் புரிந்து கொள்ள இயலாது. தொழில் நுட்பக்கருவிகள் மூலம் நன்மையான காரியங்களைப் பெற்றுக்கொள்ள எனது அறியாமை தடை செய்யவில்லை.
ஒரு வகையில் இது தேவனோடு கூடிய நமது தொடர்பை விளக்குகிறது. ஏசாயா 55:8–9 வசனங்கள் தேவன் என்னுடைய எண்ணங்களுக்கு மேலாக உயர்ந்தவர் என்பதை நினைவுபடுத்துகிறது. “என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார். பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது”.
தேவனைப் பற்றிய அனைத்துக் காரியங்களையும் நாம் புரிந்துகொள்ளாவிட்டாலும், அவரை நம்புவதை அவை தடை செய்வதில்லை. அவர் நம்மீது கொண்டுள்ள அன்பை நிரூபித்துக் காட்டியுள்ளார். “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்” (ரோம. 5:8) என்று அப்போஸ்தலன் பவுல் எழுதுகின்றார். நமது வாழ்க்கை அர்த்தமற்றதாக இருந்தாலும் அவருடைய அந்த அன்பை நம்பி அவரோடு கூட நடக்கலாம்.