இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது. சமாதானம் அறிவிக்கப்பட்டது. ஆனால் பிலிப்பைன்ஸில் ஒரு தீவிலிருந்த கிரு ஒனோடா என்ற ஜப்பானிய லெப்டினன்ட் யுத்தம் நின்றதை அறியவில்லை. அவன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன. யுத்தம் நின்றுவிட்டது என்று அச்சடிக்கப்பட்ட கைப்பிரதிகள் அவன் இருக்கும் பகுதியில் போடப்பட்டன. அவன் இருக்குமிடத்திலிருந்து எதிரிகளைத் தாக்க வேண்டும் என்ற கட்டளையை அவன் 1945ல் பெற்றான். ஆகவே ஒனோடோ, போடப்பட்ட கைப்பிரதிகள் எதிராளியின் தந்திரமான பொய்ப்பிரச்சாரம் என்று அந்தக் கைப்பிரதி கூறின செய்தியை நிராகரித்து விட்டான். யுத்தம் முடிந்து ஏறக்குறைய 30 ஆண்டுகள் கழித்து அவனுடைய முந்தைய தளபதி ஜப்பானிலிருந்து பிலிப்பைன்ஸ்க்கு சென்றபொழுது அவனுக்குக் கொடுத்த முந்தைய கட்டளையை ரத்துசெய்து அதிகாரப்பூர்வமாக ஒனோடாவை விடுவித்தார். அதற்குப்பின் மார்ச் 1974ல் ஒனோடா சரணடைந்தான். இறுதியில் ஒனோடா யுத்தம் முடிந்ததை நம்பினான்.
இயேசுகிறிஸ்துவைப் பற்றி “நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்து… மரணத்தைப் பரிகரித்து, ஜீவனையும் அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கரமாக்கினார்” (2 தீமோத். 1:10) என்ற நற்செய்தியை அநேகர் இன்னமும் கேள்விப்படவில்லை அல்லது இன்னமும் விசுவாசிக்கவில்லை. அந்த நற்செய்தியைக் கேட்ட நம்மில் சிலர் அதை நம்பினாலும், இந்தப் பிரச்சனை நிறைந்த வாழ்க்கையில் நம்முடைய சொந்த பிரயாசத்தினால் வாழ முயற்சி பண்ணி இன்னமும் தோல்வியான வாழ்க்கை வாழ்கிறோம்.
பாவத்தையும், மரணத்தையும் கிறிஸ்து வெற்றிபெற்ற மகிமையான செய்தியை யாராவது அவர்களுக்கு கூற வேண்டும். ஆரம்பத்தில் அவர்கள் நம்பிக்கை இல்லாமல் சந்தேகத்தோடு செயல்படலாம். ஆனால் நீங்கள் உங்கள் நம்பிக்கையை இழந்து விடாதீர்கள். போராட்டத்தில் கிறிஸ்து ஏற்கனவே வெற்றிபெற்று விட்டார் என்ற நற்செய்தியினால் கிறிஸ்து அவர்களது மனதைப் பிரகாசப்படுத்தும் பொழுது, அவர்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய விடுதலை உணர்வை கற்பனை செய்து பாருங்கள்.