என் சிநேகிதி கூறிய வார்த்தை என்னைக் கொட்டியது போலிருந்தது. என்னுடைய திடமான கருத்தைக் குறித்து அவளுடைய குத்துவது போன்ற விமரிசனத்தை, மீண்டும், மீண்டும் என் மனம் அசைபோட்டு போராடிக் கொண்டிருந்ததை நிறுத்தி, தூங்குவதற்கு முயற்சித்தேன். தேவஞானத்தையும், சமாதானத்தையும் தரும்படி படுத்துக்கொண்டே ஜெபித்தேன். பல வாரங்களாகியும் அக்காரியம் என்னை உறுத்திக்கொண்டே இருந்ததால்,“நான் மிகவும் புண்பட்டிருக்கிறேன். தேவனே, நான் எந்தக் காரியத்தை மாற்றிக்கொள்ள வேண்டும், அவள் கூறுவது எவ்விதத்தில் சரி என்று எனக்குக் காண்பியும்” என்று ஜெபித்தேன்.
என் வாழ்க்கையில் என் சிநேகிதி தேவனின் உப்புத்தாள் போன்று செயல்பட்டிருக்கிறாள். என் உணர்வுகள் புதிதாக உரசப்பட்டிருப்பதாக உணர்ந்தேன். நான் எந்தவிதத்தில் செயல்பட்டால் என் குணங்களை மாற்றி அமைத்துக்கொள்ள முடியும், அல்லது அது மாற்றாது என்பதையும் எனக்குள் உணர்ந்தேன். அமைதலான முறையில் என் பெருமையையும், பிடிவாதமான குணத்தையும் அறிக்கையிட்டு என்னைத் தாழ்த்த வேண்டும் என்ற பாதையைத் தெரிந்து கொண்டேன். என் கோபகுணங்களும், முதிர்ச்சியற்ற நிலையும் தேவனை மகிமைப்படுத்த முடியாது என்பதை உணர்ந்தேன்.
நீதிமொழிகள் புத்தகத்தில் சாலமோன் அரசன் கூறியுள்ள கருத்துக்களிலிருந்து சமுதாய கூட்டு வாழ்க்கை சற்று கடினமானது என்று அறிந்திருந்தான் என்பது தெளிவாகிறது. உறவுகைளைக் குறித்து நீதிமொழிகள் 27ம் அதிகாரத்தில் எழுதியிருப்பதில் அவனுடைய தேவஞானத்தை நாம் அறிந்துகொள்ள முடிகிறது. சிநேகிதர்களுக்கிடையே இரும்பு இரும்பைக் கருக்கி விடுவது போல் என்ற கூர்மையான வார்த்தைகளை ஒப்பிட்டுக் காட்டுகிறான். “இரும்பை இரும்பு கருக்கிடும்; அப்படியே மனுஷனும் தன் சிநேகிதனுடைய முகத்தைக் கருக்கி விடுகிறான்” (நீதி. 27:17). ஒவ்வொரு மனிதனிலுமுள்ள கரடுமுரடான குணத்தை வேறொருவன் நீக்கி சமப்படுத்துகிறான். என் சிநேகிதி கூறிய வார்த்தைகள் என் உணர்வுகளைக் காயப்படுத்தியது போல், இச்சொற்கள் காயங்களை ஏற்படுத்தும் (வச.6). இறுதியாக தேவன் இப்படிப்பட்ட வார்த்தைகளை நம்மை உற்சாகப்படுத்தவும், நம் கருத்துக்கள், செயல்கள் ஆகியவற்றில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்தவும் உதவி செய்கிறார்.
உங்களுடைய வாழ்க்கையில் காணப்படும் கரடு முரடான முனைகளை, தேவனுடைய மகிமைக்காக எவ்விதம் மென்மையானதாக மாற்றுவார்?