இங்கிலாந்து கிராமப்புற வயல்வெளியில் ஜி.கே. செஸ்டர்டன், தான் உட்கார்ந்து கொண்டிருந்த இடத்திலிருந்து எழுந்து நின்று கடகடவென்று மிக சத்தமாய் சிரித்தார். இவ்வாறு திடீரென அவர் மிக சத்தமாய் சிரித்த சத்தத்தைக் கேட்ட பசுக்கள் கூட, கண் இமைக்காமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தன.
சில நிமிடங்களுக்கு முன்னர் கிறிஸ்தவ எழுத்தாளரும், பரிந்துரையாளருமான செஸ்டர்டன் மிகவும் மன உளைச்சலில் இருந்தார். அன்று மதியம் அவர் மலைகளில் அலைந்து திரிந்து, பழுப்பு நிற காகிதத்தில் வண்ண, வண்ண சாக்பீஸ்களால் இயற்கைக் காட்சிகளைப் படங்களாக வரைந்தார். ஆனால், அவரிடம் வெள்ளை நிற சாக்பீஸ் இல்லாதததைக் கண்டு திகைத்து நின்றார். ஏனென்றால் தன்னுடைய ஓவியப் பணிக்கு அது மிகமிகத் தேவை என்று உணர்ந்தார். தான் நின்றிருக்கும் தரை நுண் துளைகளுள்ள சுண்ணாம்புக்கல் என்பதை அவர் அறிந்துகொண்டபின், உரத்த சத்தத்துடன் சிரிக்கத் துவங்கினார். நுண்துளை சுண்ணாம்புக்கல், வெள்ளைநிறச் சாக்பீசுக்கு இணையானது. அவர் ஒரு சிறு துண்டை தரையிலிருந்து உடைத்தெடுத்து ஓவியம் வரையும் பணியை மீண்டும் தொடர்ந்தார். வெள்ளைச் சாக்பீஸின் சேமிப்புக் கிடங்கின் மீது அவர் உட்கார்ந்திருந்தார் என்பதை உணர்ந்த செஸ்டர்டன் போல, தேவனுடைய எல்லையற்ற ஆவிக்குரிய ஆதாரங்கள் விசுவாசிகளின் மிக அருகில் எல்லா சமயங்களிலும் அபரிமிதமாகக் கொட்டிக்கிடக்கிறது. “நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும் அவருடைய திவ்விய வல்லமையானது நமக்கு தந்தருளினதுமன்றி…” (2 பேதுரு 1:3).
தேவபக்தியுடன் கூடிய வாழ்க்கை வாழ்வதற்குத் தேவையான விசுவாசம், கிருபை, ஞானம் போன்ற பண்புகள் உங்களுக்கு இல்லையே என்று நீங்கள் வருத்தப்படலாம். நீங்கள் கிறிஸ்துவை அறிந்திருந்தால் உங்களுக்கு தேவையான அனைத்தும் இருப்பதுடன், தேவைக்கு அதிகமாகவும் உங்களுக்குக் கிடைக்கும். விசுவாசிகளுக்கு எல்லாவற்றையும் அபரிமிதமாகப் பகிர்ந்தளிப்பவராகிய பரமபிதாவின் சமூகத்தை இயேசுவின் மூலம் நெருங்கிச் சேரலாம்.