ஓர் சிறுவனின் வீட்டிற்கு வெளியே அபாயச் சங்கு ஒலித்தது. பழக்கமில்லாத அந்த சத்தத்தைக் கேட்ட அவன் அது என்ன சத்தம் என்று தன் தாயிடம் கேட்டான். ஆபத்தான ஓர் புயல் வருவதை மக்களுக்கு அறிவித்து மக்களை எச்சரிக்கையாய் இருப்பதற்காக ஊதப்படுகிறது என்று அவனுக்கு அவன் தாய் விவரித்தாள். மக்கள் ஓடி ஒளிந்துகொள்ளாவிட்டால் அந்தப் புயலின் தாக்கத்தால் மடிந்து போவார்கள் என்றாள். “அம்மா அது என்ன மிக மோசமான காரியமா? நாம் மரித்துப்போனால் இயேசுவை சந்திப்போமல்லவா?” என்று கேட்டான்.

சிறு பிள்ளைகள் மரித்துப்போவது என்றால் என்ன என்பதை விளங்கிக்கொள்ள மாட்டார்கள். ஆனால் பவுல் தன் நீண்டகால அனுபவத்தில் இதே போன்ற ஓர் காரியத்தை எழுதியிருக்கிறார். “தேகத்தை விட்டுப்பிரிந்து, கிறிஸ்துவுடனே கூட இருக்க எனக்கு ஆசை உண்டு. அது எனக்கு அதிக நன்மையாயிருக்கும்” (பிலி. 1:23). இதை எழுதும் சமயத்தில் பவுல் அப்போஸ்தலன் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டிருந்தார். ஆனால் அந்த இக்கட்டான சூழ்நிலையில் மனம் சோர்ந்தவராய் அவ்வாறு எழுதவில்லை. அவருடைய பாடுகள் சுவிசேஷம் பிரபலமாகும்படிக்கு அது ஏதுவாக இருந்ததால் அதில் அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார் (வச.12–14).

இப்படியிருக்க பவுல் சரீரத்தில் இருந்து வாழவும் விருப்பம், மரிக்கவும் விருப்பம் என்று ஏன் இருதலைக்கொள்ளி எறும்புபோல் இருக்க வேண்டும்? இந்தத் தேகத்தில் குடியிருப்பது என்பது “கனிதரும் ஊழியம்” என்றும், ஆனால் அவர் மரித்தால் கிறிஸ்துவுடன் மிக நெருக்கமான உறவை அனுபவித்து மகிழ்வார் என்பதை நன்கு அறிந்திருந்தார். இந்த தேகத்தைவிட்டுக் குடிபோதல் என்பது கர்த்தரிடத்தில் குடியிருத்தல் என்பதாகும் (2 கொரி. 5:6–8).

இயேசுவின் மரணம், உயிர்த்தெழுதலினால் நமக்குக் கிடைக்கும் இரட்சிப்பின் வல்லமையை விசுவாசிப்பவர்கள் அனைவரும் அவருடன் நித்திய நித்திய காலமாய் வாழுவார்கள். “பரலோகத்தில் முடிவுறும் வாழ்க்கை மிகச்சிறந்தது” என்று கூறப்படுகிறது. நாம் மரித்தாலும் பிழைத்தாலும் வெற்றி நமதே. “கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்” (பிலி. 1:21).