இரண்டாவது உலகப்போரின் பொழுது என் தந்தை அமெரிக்க ஐக்கிய நாடுகளின் இராணுவத்தில் தென் பசிபிக் பகுதியில் பணியாற்றினார். அக்காலத்தில் என் தந்தை சமயக் கோட்பாடுகளை வெறுத்து,“நான் நடப்பதற்கு ஊன்றுகோல் தேவையில்லை” என்று கூறுவார். ஆனால் ஆவிக்குரிய காரியங்களில் அசைக்க முடியாத நம்பிக்கையை ஓர் நாளில் பெற்றுக்கொண்டார். மூன்றாவது குழந்தையை பெற்றெடுக்க என் தாய் பிரசவ வார்டுக்குள் சென்று விட்டார். புதிதாகப் பிறக்கப்போகிற ஓர் தம்பியையோ அல்லது தங்கையையோ சீக்கிரம் பார்க்கப் போகிற உணர்வுகளுடன் நானும் என் சகோதரனும் படுக்கைக்குச் சென்றோம். மறுநாள் காலை படுக்கை விட்டு எழுந்து வந்தபொழுது உணர்ச்சி வசப்பட்டு “ஆணா பெண்ணா” என்று என் தந்தையிடம் கேட்டேன். “பெண் குழந்தை இறந்தே பிறந்தது”, என்று என் தந்தை பதிலளித்தார். எங்கள் இழப்பை எண்ணி அனைவரும் அழுதோம்.

நொறுங்குண்ட இருதயத்தோடு என் தந்தை முதல் முறையாக ஜெபித்தார். தன் மகளை மீண்டும் அவர் பெறமுடியாவிட்டாலும், அந்த நிமிடமே தேவனிடமிருந்து சமாதானமும், ஆறுதலும் தன்னை ஆட்கொள்வதை உணர்ந்தார். சீக்கிரமே வேதம் வாசிப்பதில் ஆர்வமுள்ளவராய் வேதத்தை வாசிப்பதிலும், தன் நொறுங்குண்ட இதயத்தை சுகப்படுத்துபவரை நோக்கி இடைவிடாது ஜெபிக்கவும் ஆரம்பித்தார். ஆண்டுகள் செல்லச் செல்ல அவர் விசுவாசத்தில் வளர்ச்சியடைந்தார். வேத ஆராய்ச்சி செய்து போதிப்பவராகவும், ஆலயத்தில் மூப்பராகவும் செயல்பட்டு இயேசுவின் உத்தம சீடராக மாறினார்.

பெலவீனருக்கு இயேசு ஓர் ஊன்றுகோல் அல்ல! புதிய ஆவிக்குரிய ஓர் வாழ்க்கைக்கு மூல கர்த்தாவாக இருக்கிறார்! நாம் நொறுங்கும்பொழுது அவர் முழுமையாகப் புதிதாக்க முடியும் (சங். 119:75).