சூரிய ஒளி பிரகாசித்துக் கொண்டிருந்த அழகான ஓர் நாளில் ஆவியில் மிகவும் சோர்வுற்றவனாய் ஓர் பூங்காவில் நடந்து கொண்டிருந்தேன். ஒரு காரியம் மாத்திரமல்ல – எல்லாக் காரியங்களும் சேர்ந்து மனபாரத்தினால் என்னைக் கீழே ஆழ்த்தின. ஓர் பெஞ்சில் நான் அமர்ந்தபொழுது, ஓர் சிறு பலகையைப் பார்த்தேன். அது அன்பு கணவன், தந்தை, சகோதரன், நண்பனாக இருந்தவரின் அன்பின் ஞாபகார்த்தமாக வைக்கப்பட்டிருந்தது. மேலும் அந்தப்பலகையில் “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுபெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்து போகார்கள்” என்ற வசனமும் எழுதப்பட்டிருந்தது (ஏசா.40:31).
இந்த பரிச்சயமான வார்த்தைகள் எனக்குத் தேவனின் தனிப்பட்ட தொடுதலாகக் காணப்பட்டது. சரீரப்பிரகாரகவும், உணர்வுப் பூர்மாகவும், ஆவிக்குரிய விதத்திலும் நம் அனைவருக்கும் சோர்வுகள் வரும். நாம் சோர்வுற்றாலும்,“பூமியின் கடையாந்திரங்களையெல்லாம் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதி தேவன் சோர்ந்து போவதுமில்லை, இளைப்படைவதுமில்லை” என்று ஏசாயா கூறுகிறார் (ஏசா. 40:28). ஒவ்வொரு சூழ்நிலைகளிலும் இதை எவ்வளவு இலேசாக மறந்து விடுகிறேன். “சோர்ந்து போகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமற்றவனுக்கு சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்” (வச.29).
உங்கள் வாழ்க்கைப் பயணம் எவ்வாறு இருக்கிறது? சோர்வு, தேவனுடைய பிரசன்னத்தையும், வல்லமையையும் மறக்கச் செய்தால், ஏன் நின்று அவருடைய வாக்குத்தத்தை நினைத்துப் பார்க்கக்கூடாது? “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுபெலனடைவார்கள்” (வச.31). இங்கே, இப்பொழுது, எங்கே நாம் இருக்கிறோமோ அங்கேயே!