எனது சிநேகிதி மிர்னா வேறு ஒரு நாட்டிற்கு சென்றபொழுது, அங்கிருந்த ஓர் ஆலயத்தில் நடந்த ஆராதனையில் பங்கெடுத்தாள். மக்கள் ஆலயத்திற்கு நுழைந்தவுடன், ஆலயத்தின் முகப்பு பகுதிக்கு எதிர்த்திசையில் முழங்கால்படியிட்டு ஜெபித்தார்கள். அந்த சபை மக்கள், ஆராதனை வேளை ஆரம்பிக்கும் முன்பு அவர்கள் பாவங்களைத் தேவனுக்கு முன்பாக அறிக்கையிட்டார்கள் என்பதை என் சிநேகிதி அறிந்தாள்.
அந்தத் திருச்சபை மக்களின் இந்தத் தாழ்மையான செயல் சங். 51ல் தாவீது கூறின “தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை, நீர் புறக்கணியீர்” (சங். 51:17) என்ற வசனம் என் மனதில் படம் போலத் தோன்றியது. இந்த வசனத்தில் தாவீது பத்சேபாளிடம் விபச்சாரத்தில் ஈடுபட்ட பாவத்திலிருந்து அவன் மனந்திரும்பினதையும், வருத்தத்தையும் விளக்குகிறான். தேவன் பார்ப்பதுபோல, நாம் செய்த பாவச்செயல் முற்றிலும் தவறானது என்றும் அதை வெறுத்து, அந்தப் பாவத்தை திரும்பவும் செய்ய விரும்பாததுமே நாம் செய்த பாவத்திற்கான உண்மையான மனந்திரும்புதலாகும்.
நாம் நமது பாவத்தைக் குறித்து உண்மையாக துக்கப்பட்டு மனம் உடைந்தால், தேவன் நம்முடைய பாவங்களை மன்னித்து நம்மை மறுபடியும் புதுப்பிக்கிறார். “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” (1 யோவா. 1:9). இந்த மன்னிப்பு தேவனோடுகூட ஒரு திறந்த மனப்பான்மையை நமக்கு உண்டாக்கி சுத்தமான மனதோடுகூட தேவனைத் துதிப்பதற்குரிய ஆரம்பமாகிறது. தாவீது மனந்திரும்பி பாவத்தை அறிக்கையிட்டு தேவனால் மன்னிக்கப்பட்ட பின்பு “ஆண்டவரே, என் உதடுகளைத் திறந்தருளும்; அப்பொழுது என் வாய் உம்முடைய புகழை அறிவிக்கும்” (சங். 51:15) என்று பதிலுரைத்தான்.
தேவனுடைய பரிசுத்தத்திற்கு, தாழ்மையே பொருத்தமான செயலாகும். அவருடைய மன்னிப்பிற்கு நமது இருதயத்தின் துதியே பொருத்தமான செயலாகும்!