ஹாரியட் டப்மேன் (1822–1913) அடிமையாகப் பிறந்து, அடிமையாக வாழ்ந்தாள். அவளது வாலிபப் பருவத்தில் அடிமையாக மிகவும் மோசமாக நடத்தப்பட்டாள். ஆனால், அவளுடைய தாயார் கூறின வேதாகமக் கதைகள் மூலமாக வாழ்க்கையில் நம்பிக்கை ஒளியைப் பெற்றாள். பார்வோனின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்ற இஸ்ரவேல் மக்களின் வரலாற்றின் மூலமாக, தேவன் அவருடைய மக்களின் விடுதலையை விரும்புகிறார் என்பதை அறிந்தாள்.

ஹாரியட், மேரிலேண்ட் மாநிலத்தின் எல்லையிலிருந்து இரகசியமாக தப்பிச் சென்றதினால், அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்றாள். ஆனால் இன்னமும் அநேக மக்கள் அடிமைத்தளையில் இருப்பதை அவள் அறிந்திருந்ததால், அவளால் வாழ்க்கையில் நிம்மதியாக இருக்க இயலவில்லை. ஆகவே அவள், தனக்கு நேரிடக்கூடிய ஆபத்தைக் கருதாமல் இன்னமும் அடிமைத்தனத்தில் இருப்பவர்களை விடுவிக்க 12க்கு மேற்பட்ட மீட்பு முயற்சிகளின் மூலம் அநேகரை விடுதலைக்குள் கொண்டு வந்தாள். பயப்படாமல் “நான் ஒரு முறை மட்டும் தான் மரிப்பேன்” என்று கூறினாள்.

“ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்” (மத். 10:28) என்ற வசனத்தின் உண்மையை ஹாரியட் அறிந்திருந்தாள். இயேசு அவருடைய சீஷர்களை முதல் முதலாக ஊழியம் செய்யும்படி மக்கள் மத்தியில் அனுப்பினபொழுது, அந்த வார்த்தைகளை அவர்களிடம் கூறினார். அவர்களது ஊழியத்தில் ஆபத்துக்களைச் சந்திப்பார்கள் என்றும், எல்லா மக்களும் அவர்களை அன்புடன் ஏற்றுக்கொள்ளமாட்டார்களென்றும், இயேசு அறிந்திருந்தார். பின்பு ஏன் அவர் அவரது சீஷர்களை ஆபத்துக்கு ஊடாக நடத்தினார்? அதற்கான பதில் அதன் முந்தின அதிகாரத்தில் உள்ளது. “இயேசு திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறடிக்கப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள் மேல் மனதுருகினார்” (மத். 9:36).

அடிமைத்தளையில் கட்டப்பட்டிருப்பவர்களை ஹாரியட் டப்மேனால் மறக்க இயலவில்லை, அவளது இந்தத் தன்மை நாம் பாவத்தின் அடிமைத்தனத்தில் கட்டப்பட்டிருந்தபொழுது, நம்மை மறக்காத கிறிஸ்துவை நமக்கு படம்பிடித்துக் காண்பிக்கிறது. அவளது தைரியமான உதாரணம், இந்த உலகில் நம்பிக்கையற்று வாழும் மக்களை நினைவுகூர நம்மைத் தூண்டுகிறது.