டேவிட் டில்லர்ட், அவருக்குக் கீழாகப் பணி புரியும் இளம் கட்டிடக் கலைஞர்களிடம் அவர்கள், யாருக்கு வீடுகளை வடிவமைக்கிறார்களோ அவர்களோடு போய் தங்கி இருக்க அனுப்புவார். அவர்கள் மூத்தகுடிமக்கள் வாழும் இடத்திற்குச் சென்று அங்குள்ள 80, 90 வயதுள்ளவர்களைப் போலவே பைஜாமா அணிந்து கொண்டு, அவர்கள் வாழும் சூழ்நிலையிலேயே அவர்களைப் போலவே 24 மணி நேரம் வாழ்வார்கள். காது கேளாதவர்களைப்போல இருக்க அவர்களது காதுகளை மூடக்கூடிய காது கேட்க உதவும் கருவிகளை பொருத்திக் கொள்வார்கள். விரல்களின் வேலை செய்யும் திறனைக்குறைக்க அவர்களது விரல்களை ஒட்டும் நாடாவினால் ஒட்டிக்கொள்வார்கள். பார்வையில் குறைபாடுகள் உள்ளவர்களைப்போல இருக்க கண்களில் கண்ணாடிகளைப் போட்டுக் கொள்வார்கள். “இப்படிச் செய்வதால் ஏற்படும் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், 27 வயதுள்ள இளைஞர்கள் பத்து மடங்கு அதிக அனுபவங்களோடு திரும்புகிறார்கள். அவர்கள் மக்களைச் சந்தித்து அவர்களது துயரங்களைப் புரிந்து கொள்கிறார்கள்” என்று டில்லர்ட் கூறுகிறார்.
இயேசு இந்த உலகத்தில் 33 ஆண்டுகள் வாழ்ந்து நம்முடைய மனிதத்தன்மையை அனுபவித்தார். “எவ்விதத்திலும் தம்முடைய சகோதரருக்கு ஒப்பாகவேண்டியதாயிருந்தது” (எபி 2:17). ஆகவே, அவர் நம்மைப் போலானார். அதனால் மனித சரீரத்தில் வாழ்வது எப்படி இருக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார். நாம் சந்திக்கும் போராட்டங்களைப் புரிந்துகொண்டு, நமது அருகில் வந்து நம்மை ஊக்கப்படுத்துகிறார்.
“அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்” (வச.18). கர்த்தர் சிலுவையைத் தவிர்த்திருக்கலாம். அதற்குப் பதிலாக அவர் அவருடைய பிதாவிற்கு கீழ்ப்படிந்தார். அவரது மரணத்தின் மூலமாக சாத்தானுடைய வல்லமையை முறித்து, மரணத்தின் பயத்திலிருந்து நம்மை விடுவித்தார் (வச.14–15).
நாம் கடந்து செல்லும் வழியில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு சோதனையிலும் இயேசு நமது அருகில் இருந்து, நமக்கு தைரியம், பெலன், நம்பிக்கை அளித்து வழிநடத்துகிறார்.