எனது உடற்பயிற்சி வகுப்பில் எனக்கு அறிமுகமான ஒரு பெண் “நீ ஒடுக்கக்கூட்டங்கள் நடத்துவதுபற்றி நான் ஆச்சரியப்படவில்லை. நீ மிகச்சிறந்த குணமுடையவளாய் இருக்கிறாய்” என்று கூறினாள். அவள் கூறியதைக் கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தாலும், அவளது விமர்சனத்தைக் குறித்து சந்தோஷம் அடைந்தேன். ஏனெனில், அவள் என்னிடத்தில் கண்ட சிறந்த நற்குணம் என்பது என்னிடமிருந்த கிறிஸ்துவின் சமாதானம் என்பதை அறிந்தேன். நாம் இயேசுவைப் பின்பற்றும்பொழுது எல்லாப்புத்திக்கும் மேலான தேவசமாதானத்தை அவர் நமக்குத் தருகிறார் (பிலி. 4:7). அந்த தேவசமாதானம் நம்மை அறியாமலேயே நம்மிலிருந்து பரவுகிறது.
இயேசு அவருடைய சீஷர்களோடு இறுதி இராப்போஜனத்தில் பங்கெடுத்தபொழுது, அவரது மரணம், உயிர்த்தெழுதல் குறித்து அவர்களை ஆயத்தப்படுத்ததக்கதாக இந்த சமாதானத்தை அவர்களுக்கு வாக்குப்பண்ணினார். இந்த உலகத்தில் அவர்களுக்கு உபத்திரவம் இருந்தாலும், பிதாவானவர் சத்திய ஆவியாகிய தேற்றரவாளனை அனுப்புவார் என்றும், ஆவியானவர் அவர்களோடிருந்து அவர்களை வழி நடத்துவார் என்றும் இயேசு கூறினார் (யோவா. 14:16–17). அந்த பரிசுத்தாவியானவர், அவர்களைச் சத்தியத்தில் நடத்தி, ஆறுதல்படுத்தி தேவனுடைய சமாதானத்தை அருளுவார் என்று கூறினார். வெகுவிரைவில், யூதமதத் தலைவர்களால் உண்டாகக் கூடிய கடுமையான எதிர்ப்புகள், இயேசுவின் சிலுவை மரணம் போன்ற பல்வேறு சோதனைகளை அவர்கள் சந்தித்தாலும், அவர்களைப் பயப்படவே வேண்டாம் என்று கூறினார். ஏனென்றால், பரிசுத்தாவியானவரின் பிரசன்னம் அவர்களை விட்டு ஒருக்காலும் நீங்காது.
தேவனுடைய பிள்ளைகளாக, நாம் பல்வேறு உபத்திரவங்களைச் சந்தித்தாலும், அவருடைய பரிசுத்தாவியானவர் நமக்குள்ளாக வாசம் பண்ணுவதோடு, நம்மிலிருந்தும் வெளிப்படுவார். கடை வெளியிலோ, பள்ளியிலோ, வேலை ஸ்தலத்திலோ, அல்லது உடற்பயிற்சி நிலையத்திலோ நாம் சந்திக்கும் ஒவ்வொருவருக்கும் நம்மிலிருந்து வெளிப்படும் தேவசமாதானமே அவரைக்குறித்து சாட்சி கொடுக்கும்.