நான், என் தாத்தாவுடன் வடக்கு கானாவில் வாழ்ந்து வந்தபொழுது, ஆடுகளைக் கவனிப்பது எனது அனுதின வேலையாக இருந்தது. ஒவ்வொரு நாள் காலையிலும் புல்வெளியில் மேய்வதற்கு அவைகளை அழைத்துச்சென்று சாயங்காலம் வீடு திரும்புவேன். அந்த நாட்களில் ஆடுகள் அதிக பிடிவாதமாக இருக்கக்கூடியவை என்பதை முதல் முதலாவதாக கவனித்தேன். உதாரணமாக, அவைகள் ஒரு வயலைப் பார்க்கும்பொழுது அவைகளின் உள் உணர்வு தூண்டுதலினால் அவைகள் மேய்வதற்கு நேராக அந்த வயல்களுக்குள் ஓடிவிடும். அதனால், எனக்கும் அந்த வயலின் சொந்தக்காரருக்கும் இடையே அநேக முறை பிரச்சனைகள் ஏற்படும்.

சில சமயங்களில், வெயிலின் கடுமையினால் களைப்படைந்து ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து ஓய்வு எடுக்கும்பொழுது, ஆடுகள் புதர்களைத் தாண்டி மலைகளை நோக்கி ஓடிவிடும். அவைகளை நான் விரட்டிச் செல்லும் பொழுது எனது மெலிந்த கால்களில் முட்செடிகள் குத்திக் கிழித்து விடும். ஆபத்திலிருந்தும், கஷ்டத்திலிருந்தும் அவைகளை மீட்டு நடத்தி செல்வது மிகவும் கடினமாக இருந்தது. அதிலும் முக்கியமாக திருடர்கள் வயல்களின் நுழைந்து வழிதப்பிச் செல்லும் ஆடுகளை திருடிச்செல்ல முயலும் பொழுது, அவர்களிடமிருந்து ஆடுகளைக் காப்பாற்றுவது மிகக்கடினமான காரியம்.

ஆகவே “நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்” (ஏசா. 53:6) என்று ஏசாயா சொல்வதை என்னால் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. கர்த்தருக்கு பிரியமில்லாத காரியங்களை விரும்புவதும், செய்வதும், நமது நடக்கையினால் பிறரைப் புண்படுத்துவதும், வேறு காரியங்களில் நாம் ஈடுபாடு கொள்வதினாலோ அல்லது ஆர்வமில்லாமைனாலோ தேவனுடைய வார்த்தையை வாசிப்பதற்கு நேரம் செலவழிக்காமலும் அவரோடு நெருங்கிய உறவு கொள்ள நேரம் செலவழிக்காமல் இருப்பது போன்ற செயல்களால் நாம் அநேகமுறை பாதை தவறி செல்லுகிறோம்.

அதிர்ஷ்டவசமாக, நம்முடைய பாவங்களையும், துக்கங்களையும் ஏற்றுக்கொண்டு (ஏசா. 53:4–6), நமக்காக அவரது ஜீவனைக் கொடுத்த நல்ல மேய்ப்பர் நமக்கு உண்டு (யோவா. 10:11). அவர், நமது மேய்ப்பனாக அவரை நெருங்கிப் பின்பற்றத்தக்கதாக பாதுகாப்பான மேய்ச்சல் நிலத்திற்கு வரும்படியாக நம்மை அழைக்கிறார்.