ரூத் அந்நிய நாட்டைச் சேர்ந்த பெண். அவள் ஓர் ஏழை விதவை. இன்றைய உலகில் பல பகுதிகளில் அவள் ஓர் ஆள்தத்துவம் இல்லாதவள் போலவே கருதப்படுவாள். அதாவது, அவளுக்கு ஒரு நம்பிக்கையுடைய எதிர்காலம் உண்டு என்று ஒருவரும் எண்ணமாட்டார்கள்.

ஆயினும், மரித்துப்போன அவளது கணவனின் உறவினர் ஒருவரின் கண்களில் ரூத்திற்கு தயவு கிடைத்தது. அவன் மிகவும் ஐசுவரியவானகவும், அதிக நிலங்களுக்கு உரிமையாளராகவும் இருந்தான். அவனுடைய நிலத்தில்தான் கீழே விழும் தானியத்தை பொறுக்கிக்கொள்ள அவள் உத்தரவு கேட்டாள். அவன் காட்டிய பரிவிற்கு “நான் அந்நியதேசத்தாளாயிருக்க, எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயை கிடைத்தது” (ரூத் 2:10) என்று ரூத் கேட்டாள்.

ரூத்திடம் பரிவுகாட்டிய “போவாஸ்” என்ற அந்த நல்ல மனிதன், உண்மையோடு அவளுக்கு பதில் அளித்தான். அவள் அவளது மாமியார் நகோமிக்குச் செய்த நல்ல காரியங்களைக் குறித்தும், அவள், அவளது சொந்த நாட்டை விட்டுவிட்டு, நகோமியின் தேவனைப் பின்பற்றி பெத்லெகேம் வந்ததைக் குறித்தும் கேள்விப்பட்டதாகக் கூறினான்.

“கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாக” அவள் வந்ததால் தேவன் அவளை ஆசீர்வதிக்க வேண்டுமென்று தேவனிடம் வேண்டிக்கொண்டான் (ரூத். 1:16;2:11–12; சங். 91:4). அவளுடைய நெருங்கிய சுதந்திரவாளியாக (ரூத். 3:9) போவாஸ் ரூத்தை திருமணம் செய்து கொண்டபொழுது, அவளுக்கு பாதுகாவலனாகவும், அவளுடைய ஜெபத்திற்கு அவனே பதிலாகவும் இருந்தான்.

ரூத்தைப்போல நாமும் அந்நியராக தேவனைவிட்டு வெகுதூரத்தில் இருந்தோம். தகுதியற்ற நம்மை நேசிப்பதற்காக நம்மை ஏன் தெரிந்துகொண்டார் என்பதைப்பற்றி நாம் ஆழமாக சிந்திக்கலாம். அதற்கான பதில் நம்மிடம் இல்லை, தேவனிடம் இருக்கிறது. “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்” (ரோம 5:8). கிறிஸ்து நமது மீட்பரானார். இரட்சிக்கப்படுவதின் மூலம் அவரிடம் நாம் வரும்பொழுது, நாம் அவரது பாதுகாவலான செட்டைக்குள் இருக்கிறோம்.