தற்காலத்தில் பிளாகிங்-ஐ (Blogging) பயன்படுத்தும் குழுவினரைப்போலவே, பிளாகிங் மூலம் அறியப்பட்ட புரூஸ்C என்பவரை நான் ஒருக்காலும் முகமுகமாய் சந்தித்ததே கிடையாது. ஆயினும் அவரது மனைவி, அவளது கணவர் மரித்து விட்டதாக அவள் இணைந்துள்ள கூட்டத்தாருக்கு செய்தி அனுப்பினபொழுது, பல்வேறு தூரமான இடங்களிலிருந்து அநேக மக்கள் அச்செய்திக்கு அளித்த மறுமொழியின் மூலமாக, நாங்கள் அனைவரும் ஒரு சிநேகிதரை இழந்துவிட்டோம் என்பதை அறிந்தோம்.

புரூஸ்C, அவரது மனதைத் திறந்து அடிக்கடி எங்களிடம் பேசியுள்ளார். பிறர்மேல் அவருக்கிருந்த கரிசனையைப் பற்றியும், அவரது வாழ்க்கையில் அவருக்கு முக்கியமானது என்ன என்பது பற்றியும் அவர் மனம் திறந்து பேசியுள்ளார். எங்களில் அநேகர் அவரை மிகவும் தெரிந்தவராக உணர்ந்தோம். சட்டத்தை செயல்படுத்தும் துறையில் பல ஆண்டுகள் பணியாற்றிய அவரது அனுபவம், கிறிஸ்துவின்மேல் அவருக்கு இருந்த விசுவாசம் இவற்றினால் அவர் எங்களுக்கு அன்புடனும், ஞானத்துடனும் அளித்து வந்த ஆலோசனைகளை இனிமேல் நாங்கள் இழந்து விடுவோம்.

இணையத்தின் மூலமாக, புரூஸ்C யுடன் நாங்கள் நடத்தின உரையாடல்களின் மூலமாக இயேசு கிறிஸ்துவைப்பற்றி முதல் நூற்றாண்டில் வசித்த விசுவாசிகளின் சாட்சியைப் புதிய கண்ணோட்டத்தில் புரிந்து கொண்டேன். புதிய ஏற்பாட்டில் பேதுரு அப்போஸ்தலன் எழுதிய முதலாம் நிருபத்தில் ரோம ராஜ்ஜியம் முழுவதும் சிதறியிருந்த அவரது வாசகர்களுக்கு “அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்பு கூருகிறீர்கள்” (1 பேது. 1:8) என்று எழுதினார்.

இயேசுவுக்கு மிகவும் நெருங்கிய நண்பனான பேதுரு துன்பங்கள் மத்தியிலும் அவர்களுக்கு நம்பிக்கையை அளவில்லாமல் அருளிய ஒருவரை, அவர்கள் பார்க்காவிட்டாலும் கேள்விப்பட்டு மட்டும் இருந்த இயேசுவைப்பற்றி எழுதினார். ஆயினும், மற்ற விசுவாச கூட்டத்தாரோடு சேர்ந்து அவர்கள் அவரை நேசித்தார்கள். அவரது ஜீவனை விலைக்கிரயமாகக் கொடுத்து அவர்களை தேவனுடைய நித்தியமான குடும்பத்தில் சேர்த்துள்ளார் என்பதை அறிந்திருந்தார்கள்.