ஒரு போதகராக நான் பணியாற்றி வந்தபொழுது, சில மக்கள், அவர்களுக்குச் சற்றுக் கூடுதலாக ஆன்மீக உதவி செய்ய இயலுமா என்று என்னிடம் கேட்பார்கள். அவர்களோடு என் நேரத்தை செலவிடுவது எனக்கு சந்தோஷமாக இருக்கும். அவ்வாறு செய்யும்பொழுது, அவர்களுக்கு நான் கற்றுத்தருவதை விட நான் அதிகமாக அந்த நேரத்தில் கற்றுக்கொள்வேன். ஒரு நாள் உண்மையான ஒரு புதிய கிறிஸ்தவர் அவரது கஷ்டங்களை சகித்தவராக “வேதத்தை வாசிப்பது எனக்கு சிறந்த காரியமல்லவென்று எண்ணுகிறேன். தேவன் என்னிடம் எதிர்பார்ப்பது என்ன என்பது பற்றி அதிகமாக வாசிக்கும்பொழுது, வேதவசனத்தை வாசித்தும் அதன்படி செய்யாதவர்களை நான் குற்றவாளியாக நியாயந்தீர்க்கிறேன்” என்று என்னிடம் கூறினார்.

அவர், அவ்வாறு என்னிடம் கூறினபொழுது பிறரிடம் குற்றம் காணும் தன்மை அவரில் உருவாக நானும் காரணமாக உள்ளேன் என்பதை உணர்ந்தேன். அந்தக்காலங்களில், புதிதாக விசுவாசத்திற்குள் வந்தவர்களிடம், நான் கூறும் முதல் காரியம் என்னவென்றால் அவர்கள் செய்யக்கூடாத காரியங்களை அவர்களுக்குப் போதிப்பதாகும். வேறு வார்த்தைகளில் கூறப்போனால், தேவனுடைய அன்பை அவர்களுக்கு அறிவித்து, பரிசுத்தாவியானவர் அவர்களில் கிரியை செய்து அவர்களை புதுப்பிப்பதற்கு இடம் கொடுக்காமல், அவர்கள் “ஒரு விசுவாசியைப் போல நடக்க வேண்டும்” என்று வற்புறுத்துவேன்.

இப்பொழுது யோவா. 3:16,17 வசனங்களைப் புதிய அர்த்தத்துடன் புரிந்து கொண்டு வருகிறேன். இயேசு அவரை விசுவாசிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்த 16வது வசனத்தைத் தொடர்ந்து “உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்” என்ற வசனம் தொடர்ந்து வருகிறது.

இயேசு நம்மை ஆக்கினைக்குட்படுத்த வரவில்லை. இந்த புதிய விசுவாசிகளுக்கு நடக்க வேண்டிய முறைகளை ஒரு பட்டியலிட்டு, அவர்களுக்குத் தருவதின்மூலம் அவர்களே அவர்களை நியாயம் தீர்த்துக்கொள்ள கற்பித்தேன். இது அவர்களைப் பிறரை நியாயம் தீர்க்க வழிநடத்தியது. குற்றவாளிகள் என்று நியாயம் தீர்ப்பதற்கு நாம் தூதுவர்களாக இல்லாமல் தேவனுடைய அன்பிற்கும், இரக்கத்திற்கும் தூதுவர்களாக இருக்க வேண்டும்.