பாபும், இவான் பாட்டரும் மகிழ்ச்சியை விரும்பும் தம்பதிகள். அவர்களுக்கு மூன்று மகன்கள் உண்டு. திடீரென அவர்களது வாழ்க்கையில் ஆச்சரியமான ஒரு திருப்பம் ஏற்பட்டது. 1956ம் ஆண்டு ஓக்லஹோமா நகரத்தில் நடந்த பில்லி கிரஹாமின் சுவிசேஷ கூட்டத்திற்குச் சென்றார்கள். அந்தக் கூட்டத்தில் இருவரும் தங்கள் வாழ்க்கையை கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுத்தார்கள். வெகுவிரைவில், அவர்கள் அறிந்துகொண்ட சத்தியத்தையும், அவர்களது விசுவாசத்தையும் பிறரிடம் பகிர்ந்து கொள்ள விரும்பினார்கள். ஆகவே ஒவ்வொரு சனிக்கிழமை இரவும் வேதாகமத்தை கற்றுக்கொள்ள விரும்பும் உயர்நிலை மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தங்கள் வீட்டைத் திறந்து கொடுத்தார்கள். என்னுடைய சிநேகிதர் ஒருவர் என்னை அங்கு அழைத்துச் சென்றார். அன்றிலிருந்து நான் பாட்டர் அவர்களின் வீட்டிற்கு ஒழுங்காக சென்றேன்.
அது வேதபாடங்களைத் தயாரித்தல், வேத வசனங்களை மனனம் செய்தல் போன்றவற்றுடன் கூடிய ஆழமாக வேதாகமத்தை ஆராய்ச்சி செய்யும் வகுப்பாக இருந்தது. சினேகித மனப்பான்மை, மகிழ்ச்சி, சிரிப்பு நிறைந்த அந்தச் சூழ்நிலையில் ஒருவரையொருவர் ஊக்கப்படுத்திக்கொண்டோம். அந்நாட்களில் கர்த்தர் எங்களது வாழ்க்கையை மாற்றிப்போட்டார்.
பாட்டர் தம்பதிகளோடு நான் அநேக ஆண்டுகள் தொடர்பு கொண்டிருந்தேன். அவர்களிடமிருந்து அநேக வாழ்த்து அட்டைகளையும், கடிதங்களையும் பெற்றுள்ளேன். அவை அனைத்திலும் “என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை” (3 யோவா. 1:4) என்ற வசனத்தோடுகூட பாப் கையெழுத்து இட்டு அனுப்புவார். யோவான் அவரது “பிரியமான காயு”வுக்கு எழுதினதுபோல (வச.1), பாபின் வாழ்க்கையில் அவர் சந்தித்த அனைவரையும் கர்த்தருடைய வழியில் தொடர்ந்து நடக்க ஊக்கப்படுத்தினார்.
சில ஆண்டுகளுக்கு முன்பாக பாபின் நினைவு ஆராதனைக்கும் சென்றேன். ஓர் இளம் தம்பதியினர், பிறர் கர்த்தரை அறிந்துகொள்ள அவர்களது இல்லத்தையும், உள்ளத்தையும் திறந்து கொடுத்ததினால் வாழ்க்கை மாறி இன்னமும் விசுவாசப் பாதையில் தொடர்ந்து நடக்கும் அநேகர், அங்கு கூடிவந்து பாபின் வாழ்க்கைக்காக தேவனை துதித்ததால், அந்த நினைவு ஆராதனை மகிழ்ச்சியினால் நிறைந்ததாய் இருந்ததது.