ஒரு பரிசுத்தவான் எப்படி இருப்பாரென்று தெரிந்துகொள்ள ஒரு சிறுமி விரும்பினாள். ஒரு நாள் அவளுடைய தாயார் பிரமாண்டமாகவும், மிக அழகாகவும் வேதாகம காட்சிகளை வண்ணம் தீட்டியிருந்த கண்ணாடி ஜன்னல்களை உடைய பேராலயம் ஒன்றிற்கு அவளை அழைத்துச் சென்றார்கள். அவற்றின் அழகைப் பார்த்த அவள், “இப்பொழுது பரிசுத்தவான் யார் என்பதை அறிந்து கொண்டேன். தங்கள் மூலமாக ஒளியைப் பிரகாசிப்பவர்களே பரிசுத்தவான்கள்” என்று சத்தமாகக் கூறினாள்.
பரிசுத்தவான்கள் என்றால், எந்தவிதமான குற்றமும் புரியாமல் இயேசுவைப்போல அற்புதங்களைச் செய்த கடந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் என்று, நம்மில் பலர் எண்ணலாம். ஆனால், கிறிஸ்து இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தின் மூலமாக தேவனுக்குச் சொந்தமான அனைவரும் பரிசுத்தவான்கள் என்று வேதாகமம் கூறுகிறது. வேறு வார்த்தைகளில் கூறினால், பரிசுத்தவான்கள் என்பவர்கள் எங்கிருந்தாலும் என்ன செய்தாலும் தேவனுக்கு ஊழியம் செய்வதற்காகப் பெற்றுக்கொண்ட உன்னதமான அழைப்பை உடையவர்களாய்த் தேவனோடுள்ள உறவைப் பிரதிபலிக்கும் நம்மைப் போன்ற மக்களே ஆவார்கள். ஆகவே பவுல் அப்போஸ்தலன் தேவனுடைய பரிசுத்தவான்களும், கிறிஸ்துவின் மகிமையான சுதந்திரவாளிகள் என்பதை அறியும்படிக்கு அவர் எழுதின வார்த்தைகளை வாசிப்பவர்களுக்கு பிரகாசமுள்ள மனக்கண்களை கொடுக்கும்படி வேண்டிக் கொண்டார் (எபே. 1:18).
இப்படியிருக்க நாம் கண்ணாடியில் எதைக் காண்கிறோம்? நம் தலையைச் சுற்றிலும் ஒளிவட்டமோ அல்லது வண்ணக் கண்ணாடியில் வரையப்பட்ட சித்திரமோ அல்ல. ஆனால் நாம் அழைக்கப்பட்ட அழைப்பை நிறைவேற்றுகிறவர்களாக இருந்தால், நம்மை அறியாமலேயே அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் ஆகிய தேவனின் நற்குணங்களை நம்மூலமாக பிரகாசிப்போம்.