நாம் கட்டாயம் தேவன் சொல்வதைக் கேட்க வேண்டும். இரு சிறு பிள்ளைகளைத் தற்காலிகமாக மூன்று மாதங்களுக்கு நாங்கள் எங்கள் வீட்டில் வைத்து வளர்க்க கேட்டுக்கொள்ளப்பட்ட பொழுது, அவர்களுடைய வருங்காலத்தைப் பற்றி நாங்கள் தீர்மானம் எடுக்க வேண்டியதாயிருந்தது. வயதுவந்த எங்கள் மூன்று பிள்ளைகளுடன், பள்ளிச் செல்லாத இரண்டு பிள்ளைகளுக்கு வளர்ப்புப் பெற்றோராக இருப்பது எங்கள் வாழ்க்கை முறைக்கு ஒவ்வாதாகவும், குடும்பம் இருமடங்கு பெரிதானதால் வேலைப்பளுவும் அதிகமாகும் நிலை ஏற்படும். ஊழியப் பாதையில் நீண்ட கால அனுபவமுள்ள மிஷனரி ஏமி கார்மிக்கேல் அம்மையார் எழுதிய “எங்கள் அனுதின தியான நூல்” எண்ணாகமம் 7ம் அதிகாரத்தில் உள்ள அறிமுகமில்லாத வசனத்திற்கு நேராக எங்களை வழி நடத்தியது.
“கோகாத்தியர் என்ன நினைத்திருப்பார்கள்? என்று ஆச்சரியப்பட்டேன்” ஆசரிப்புக் கூடாரத்திற்கு தேவையான பணிமுட்டுக்களை வனாந்திர மார்க்கமாக எடுத்துச் செல்ல மாட்டு வண்டிகள் கொண்டுவரப்பட்டது. ஆனால் கோகாத்தியரின் புத்திரரோ, பாறைகள் நிறைந்த பாதைகள் வழியாக சுட்டெரிக்கும் மணலில் கஷ்டத்துடன் பரிசுத்த ஸ்தலத்தின் பணிமுட்டுகளை தங்கள் தோள் மேல் சுமந்து செல்ல வேண்டும். பிற ஆசாரியர்களுக்கு பணி இலகுவாக இருக்கிறதே என்று எப்பொழுதாவது தங்கள் உள்ளத்தில் முறுமுறுத்திருப்பார்களா? ஒரு வேளை! அதிக விலையேறப் பெற்ற பணிமுட்டுக்கள், மாட்டு வண்டிகளில் எடுத்துச் செல்வதைவிட நம் தோள்களில் அவற்றைச் சுமந்து செல்ல தேவன் நினைத்திருக்கலாம் என்று கோகாத்தியர்கள் நினைத்திருப்பார்கள்.
என் கணவனும், நானும் இது தான் எங்களுக்கு கிடைத்த பதில் என்று ஏற்றுக் கொண்டோம். வளர்ச்சிகுன்றிய நாடு ஒன்றிலிருந்து ஓர் குழந்தையைத் தாங்க வேண்டும் என்று நாங்கள் அடிக்கடி நினைப்பதுண்டு, ஆனால் அதை நாங்கள் செய்யவில்லை. ஒரு வேளை அது மாட்டு வண்டியைப் போல் இலகுவாக இருந்திருக்கும். இப்பொழுது எங்கள் வீட்டில் அவர் மிக அருமையாகக் கருதும் தேவை மிகுந்த இரண்டு பிள்ளைகளை எங்கள் தோள்களில் சுமக்க வேண்டியதாயிருக்கிறது.
நம் ஒவ்வொருவருக்கும் தேவன் வெவ்வேறு திட்டங்களை வைத்திருக்கிறார். பிறருக்கு இலகுவான பணியோ அல்லது மிகவும் கவர்ச்சிகரமான பணியோ கொடுக்கப்பட்டுள்ளது என்று நாம் நினைக்கத் தோன்றும். நாம் செய்ய வேண்டிய பணிக்காக, நம் அன்பின் தேவன் நம்மை பொறுக்கி எடுத்திருக்கும் பொழுது “இதை என்னால் செய்ய முடியாது” என்று முறுமுறுக்க நாம் யார்?