ஓர் பெரிய திருச்சபை ஊழியத்தை விட்டு 1986ம் ஆண்டு ஜான் பைப்பர் கிட்டத்தட்ட வெளியேறிவிட்டார். தன்னுடைய பத்திரிக்கையில் “நான் அதிகமாய் சோர்வடைந்துவிட்டேன்; மிகவும் குழப்பமடைந்திருக்கிறேன். ஒவ்வொரு திசையிலும் எதிர்ப்பாளர்கள் இருப்பதை உணர்கிறேன்” என்று அத்தருணத்தில் ஒத்துக் கொண்டார். ஆனால் பைப்பர் வெளியேறிவிட வில்லை. அவர் ஊழியம் செய்த சபையைவிட வளர்ச்சியடையும் ஓர் ஊழியத்தை அவருக்குத் தேவன் கொடுத்து அவரைப் பயன்படுத்தினார்.
வெற்றி என்றச் சொல் இலகுவில் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடிய ஒன்றாகக் காணப்பட்டாலும் ஜான் பைப்பர் வெற்றி பெற்றார் என்றே நாம் கூறவேண்டும். ஆனால் அவர் ஊழியம் ஒரு போதும் வளர்ச்சியடையாவிட்டால் என்ன ஆகும்?
எரேமியாவுக்கு தேவன் நேரடியான ஓர் அழைப்பைக் கொடுத்தார். “நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னை பரிசுத்தம் பண்ணினேன்” என்று தேவன் கூறினார் (எரே 1:5). அவனுடைய சத்துருக்களுக்கு பயப்பட வேண்டாம் “உன்னைக் காக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன்” என்று கர்த்தர் அவனை ஊக்கப்படுத்தினார் (வச.8).
எரேமியா தன் தாயின் வயிற்றில் உருவாகுமுன்னே தேவன் அழைத்த அழைப்பை தவறான விதத்தில் புரிந்து கொண்டு, தவறான முறையில் பேசிப் புலம்பினான். “என் தாயே, தேசத்துக்கெல்லாம் வழக்குக்கும் வாதுக்குமுள்ளவனாயிருக்கும்படி என்னை நீ பெற்றாயே” (15:10) என்று புலம்பினான்.
தேவன் எரேமியாவைக் காப்பாற்றினார். ஆனால் அவருடைய ஊழியம் விருத்தியடைய வில்லை. அவனுடைய ஜனங்கள் மனம்திரும்பவில்லை. அவாகள் கொலையுண்டு, அடிமைப்படுத்தப்பட்டு, சிதறடிக்கப்பட்டதைக் கண்டான். ஆயுட் காலமுழுவதும் ஏமாற்றங்களையும், வெறுப்பையும் சந்தித்தாலும் அவன் வெளியேறிவிடவில்லை. தேவன் தன்னை ஓர் வெற்றிகரமான வாழ்க்கைக்கு அல்ல உண்மையாயிருக்கவே அழைத்திருக்கிறார் என்பதை அறிந்திருந்தான். தன்னை அழைத்த தேவனைப் பற்றிக் கொண்டான். எரேமியாவின் தணியாத மனதுருக்கம் எப்படியாயினும் தம்மண்டை அனைத்து மக்களும் திரும்ப வேண்டும் என்ற தேவனின் தணியாத வாஞ்சையை வெளிப்படுத்துகிறது.