ஸ்டிக் கெர்னல் மரிக்கும் முன்பு, உள்ளுரில் உள்ள இறந்தவர்களை அடக்கம் செய்யும் இடத்தின் பொறுப்பாளரிடம், தான் இறந்தபின்பு, தன்னைப் பற்றிய வழக்கமான இறப்பு செய்தியை அவர் விரும்பவில்லை என்று கூறினார். அதற்குப் பதிலாக அவர் இறந்த செய்தியை அறிவிக்கும்பொழுது, “நான் மரித்து விட்டேன்” என்ற மூன்றே வார்த்தைகளில் அறிவிக்க வேண்டும் என்று சுவீடன் நாட்டைச் சேர்ந்த கெர்னல் கேட்டுக் கொண்டார். கெர்னல் அவரது 92வது வயதில் மரித்த பொழுது செய்தித் தாள்களில் அவரது இறப்பு பற்றி மேலே கூறப்பட்ட மூன்றே வார்த்தைகளே வெளிவந்தன. வழக்கத்திற்கு மாறான அந்த அறிவிப்பு உலகெங்கும் உள்ள செய்தித்தாள்களின் கவனத்தை ஈர்த்தது. உலகமனைத்திலும் உள்ள நாடுகளின் கவனம் அந்த மூன்று வார்த்தை இறப்புச் செய்தியினால், அந்த மனிதன் எதிர்பார்த்ததை விட அதிகமான கவனத்தை ஈர்த்தது.
இயேசு சிலுவையில் அறையப்பட்ட பொழுது “அவர் மரித்துவிட்டார்” என்ற அவரது இறப்புச் செய்தி வாசிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் மூன்று நாட்களுக்குப்பின், அவரது இறப்புச் செய்தி, ‘அவர் உயிர்த்தெழுந்தார்’ என்ற தலைப்புச் செய்தியாக மாறிவிட்டது. புதிய ஏற்பாட்டின் பெரும் பகுதியில் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலினால் ஏற்பட்ட விளைவுகளை, அறிவிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. “கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே… கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்?… நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயம் கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே” (ரோமர் 8:34-37).
இயேசுவின் மரணத்தைக் குறித்த மூன்று வார்த்தை இறப்புச் செய்தியாகிய “அவர் மரித்துவிட்டார்” என்பது நமது இரட்சகரைப் பற்றிய என்றும் மாறாத துதியின் பாடலாக மாறிவிட்டது. அவர் உயிர்த்தெழுந்தார்! ஆம் அவர் உயிர்த்தெழுந்தார்!