புகைப்படமும், வீடியோபடமும் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு இயேசு ஏன் உலகத்திற்கு வந்தார்? இக்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திற்குப் பின் அவர் வந்திருந்தால் அவருடைய படத்தைப் பார்ப்பதின் மூலம் அவருடைய போதனைகள் அநேக மக்களை சென்றடைந்திருக்கும், அல்லவா? ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளை விட மிக முக்கியமானது.

“அப்படி இல்லை” என்று ரவி சகரியாஸ் கூறுகிறார்.

“ஆயிரம் படங்களை விட ஒரு வார்த்தை மிகவும் முக்கியமானது” என்று அவர் கூறுகிறார். அதற்குச் சான்றாக ரிச்சர்ட் கிராஷா என்ற கவிஞரின் மிகப் பிரபலமான வரிகளாகிய “தண்ணீர் அதன் எஜமானைப் பார்த்து வெட்கியது” என்ற வரிகளை மேற்கோளாகக் காண்பிக்கிறார். இந்த ஒரு எளிய வரியின் மூலம், கிராஷா இயேசு கிறிஸ்து செய்த முதலாம் அற்புதத்தின் சாரத்தை வெற்றிகரமாகப் பதிவு செய்துள்ளார் (யோவா 2:1-11). சிருஷ்டியானது இயேசுவை அதன் சிருஷ்டிகராக அறிந்து கொண்டது. ஒரு சாதாரண தச்சனால் தண்ணீரை திராட்சைரசமாக மாற்ற இயலாது.

மற்றொருமுறை “இரையாதே அமைதலாயிரு” என்ற வார்த்தைகள் கடலில் ஏற்பட்டபுயலை அடக்கின பொழுது, ஆச்சரியப்பட்ட அவரது சீஷர்கள் “காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே இவர் யாரோ?” என்று கேட்டார்கள் (மாற் 4:39-41). பின்பு ஒரு முறை இந்த மக்கள் பேசாமலிருந்தால், “இந்தக் கல்லுகளே கூப்பிடும்” என்று பரிசேயர்களிடம் இயேசு கூறினார் (லூக் 19:40). கற்கள் கூட அவர் யார் என்பதை அறிந்திருந்தன.

“அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்” (யோவா 1:14) என்று யோவான் நமக்கு கூறுகிறார். “ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும்… ஜீவவார்த்தையைக் குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்”

(1 யோவா 1:1) என்று யோவான் அவருடைய கண்களால் கண்ட அனுபவத்தைப் பற்றி எழுதினார். யோவானைப் போல, நாமும் காற்றும், கடல் தண்ணீரும், கீழ்ப்படிந்த இயேசுவைப்பற்றி, நமது வார்த்தைகளை பயன்படுத்தி, பிறருக்கு அறிமுகப் படுத்தலாம்.