எனது தகப்பனார் அவரது வயது முதிர்ந்த காலத்தில் கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட பொழுது, சோதனையை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்த, அவரது திட்டம் என்னை மிகவும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. சில நேரங்களில் சோதனையை சந்திக்க நேரும் பொழுது, அவர் அவ்விடத்தை விட்டு விலகிச் சென்றுவிடுவார். உதாரணமாக அவருக்கும் அண்டை வீட்டுக்காரருக்கும் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு அது கொஞ்சம் கொஞ்சமாக சச்சரவில் போய் முடிவது போலிருந்தால் அந்த வாய்ச் சண்டை தீவிரப்படுத்தப்படுவதை தவிர்க்க அந்த இடத்தை விட்டு விலகிக் சென்றுவிடுவார்.
ஒரு நாள் உள்ளுரில் தயாரிக்கப்பட்ட பிட்டோ என்ற சாராயத்தை வாங்குவதற்காக கூடின அவரது சிநேகிதர்களைச் சந்தித்தார். இயேசுவை அறியுமுன்பு எனது தகப்பனார் மிக அதிகமாக சாராயம் குடிப்பவராக இருந்து உடல் நலம் அதிகம் பாதிக்கப்பட்டதால், குடியை விடத் தீர்மானம் பண்ணியிருந்தார். ஆகவே என் தகப்பனார், அவரது சிநேகிதர்களை பின்னால் சந்தித்துக் கொள்ளலாம் என்று எண்ணி அவர்களுக்கு வணக்கம் செலுத்தி விட்டு அவ்விடத்தை விட்டு உடனே வெளியேறி விட்டார்.
ஆதியாகமத்தில் போத்திபாரின் மனைவி யோசேப்பை எப்படியாவது பாவத்திற்குட்படுத்த முயற்சித்தாள் என்பதைக் குறித்து வாசிக்கிறோம். அவளுக்கு இணங்குவது “தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்வது” என்று யோசேப்பு, உடனே அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டான் (ஆதி 39:9-12).
அநேக முறைகள் சோதனைகள் நம்மை நெருக்கும். சில சமயங்களில் நமது சொந்த ஆசைகளினால் சோதனைகள் வரலாம். மற்ற சமயங்களில் நாம் சந்திக்கும் சூழ்நிலைகளாலோ அல்லது மக்களாலோ சோதனை வரலாம். “மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல் சோதனையைத் தாங்கத்தக்கதாக சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார் (1 கொரி 10:13) என்று பவுல் கொரிந்தியருக்கு கூறியுள்ளார்.
சோதனைக்குக் காரணமானவைகளை நீக்குவது அல்லது அவற்றை விட்டு விட்டு ஓடுவது இவற்றின் மூலம் சோதனைகளிலிருந்து தப்பலாம். சோதனையிலிருந்து தப்ப அதை விட்டு விலகிச் செல்வதே மிகச் சிறந்த வழியாகும்.