ஐஸ்வரியமும், முரட்டு குணமும் உடைய நாபால் எனும் ஒரு மனிதன் தாவீதின் ஆட்கள் கேட்ட உதவிகளை கொடுக்க மறுத்ததால், தாவீதும் அவனுடைய 400 வீரர்களும் நாபாலுடன் போரிட அவனைத் தேடி கர்மேல் பகுதிக்குச் சென்றார்கள். நாபாலின் மனைவி அபிகாயில் தாவீதை இடையில் சந்தித்திருக்காவிட்டால், நிச்சயமாக தாவீது நாபாலை கொன்றிருப்பான். வர இருந்த அழிவை தவிர்க்கக் கூடிய நம்பிக்கையுடன், தாவீதின் படை அனைத்திற்கும் தேவையான உணவை எடுத்துக் கொண்டு நாபாலின் மனைவி தாவீதை சந்திக்கச் சென்றாள். அவள் மிகவும் தாழ்மையுடனும், மரியாதையுடனும், தாவீது அவனது கோபத்தில் பழி வாங்கும்படி செயல்பட்டால் அந்தக்குற்ற உணர்வு நிச்சயமாக அவனைப் பாதிக்கும் என்று நினைப்பூட்டினாள் (1 சாமுவேல் 25:31). அவள் கூறுவது சரி என்று தாவீது உணர்ந்து, அவளது ஞானமுள்ள ஆலோசனைகளுக்காக அவளை ஆசீர்வதித்தான்.

தாவீதின் கோபம் நியாயமானது, அவனது படை வீரர்கள் வனாந்திரத்தில் நாபாலின் மேய்ப்பர்களை பாதுகாத்து இருந்தார்கள் (வச.14-17). ஆனால் அவன் செய்த நன்மைக்குப் பதிலாக தீமை செய்யப்பட்டது. அவனது கோபம் அவனை பாவத்திற்கு நேராக வழிநடத்தினது. கொலை செய்வதையும், பழி வாங்குதலையும், தேவன் விரும்பாதவர் (யாத் 20:13; லேவி 19:18) என்று தாவீது நன்கு அறிந்திருந்தும் நாபாலை வாளால் குத்தி கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவனுக்குள் மேலோங்கி நின்றது.

நாம் பாதிக்கப்படும்பொழுது உடனே நமக்குள் ஏற்படும் இயற்கையான உணர்வுகளை தேவனுடைய நோக்கத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து செயல்பட வேண்டும். நம்மைப் பாதித்த மக்களை வார்த்தைகளால் சாடுவதற்கு முயலுவோம். நம்மை நாமே தனிமைப்படுத்திக்கொள்வோம். அல்லது பல்வேறு முறைகளில் தப்பித்துக்கொள்ள முயலுவோம். ஆயினும் கிருபை, அன்பு நிறைந்த முறையில் அவ்வுணர்வுகளை நாம் சந்தித்தால் பின்னால் நாம் வருத்தமடைவதை தவிர்ப்பதோடு அது மிக முக்கியமாக தேவனைப் பிரியப்படுத்தும் செயலாக இருக்கும். நம் உறவுகளில் தேவனை மகிமைப் படுத்த வேண்டுமென்று நாம் விரும்பினால் நமது சத்துருக்களைக் கூட நம்மோடு சமாதானமாக இருக்கவைக்க தேவன் வல்லமையுள்ளவர் (நீதி 16:7).