1952ல் பிளாரன்ஸ் சாட்விக், கலிபோர்னியா கடற்கரையிலிருந்து 26 மைல் தூரத்திலுள்ள கேற்றலினா தீவிற்கு நீந்திச் செல்ல முயற்சி செய்தாள். 15 மணி நேரம் கழித்து கடுமையான பனி மூட்டம் வந்து அவளது பார்வையை மறைத்தது. அதனால் அவள் திசையை சரியாக அறிய இயலாமல் நீந்துவதை கைவிட்டு விட்டாள். அவள் அடைய வேண்டிய இலக்குக்கு ஒருமைல் தூரம் மட்டும் இருக்கும் பொழுதுதான், அவள் அவளது முயற்சியை கைவிட்டிருந்ததை பின்னால் அறிந்து மிகவும் கவலையும் எரிச்சலும் அடைந்தாள்.
இரண்டு மாதங்கள் கழித்து, சாட்விக் மறுபடி இரண்டாவது முறையாக கலிபோர்னியா கடற்கரையிலிருந்து கேற்றலினா தீவிற்கு நீந்திச் செல்ல முயற்சி செய்தாள். மறுபடியும் கடுமையான பனிமூட்டம் ஏற்பட்டது. ஆனால் இந்தமுறை அவள் விடாமல் நீந்தி கேற்றலினா கால்வாயை முதன் முதலில் கடந்த பெண்மணி என்ற பெயரைப்பெற்றாள். அவள் சேர வேண்டிய கரையை கண்களால் காண இயலாவிட்டாலும், மனதில் அக்கரையை கற்பனை பண்ணிக் கொண்டே நீந்தினதாக சாட்விக் கூறினாள்.
நமது வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் நமது பார்வையை மறைக்கும் பொழுது, நமது விசுவாச கண்களால் நாம் அடைய வேண்டிய இலக்கைக்காண நாம் கற்றுக் கொள்ளுவதற்கு நமக்கு ஒரு தருணம் உள்ளது. புதிய ஏற்பாட்டிலுள்ள எபிரேயருக்கு எழுதியுள்ள நிருபத்தில் “விசுவாசத்தைத் துவக்குகிறவரும், முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்” (எபி 12:1) என்று இந்த வசனம் நம்மை ஊக்கப்படுத்துகிறது. நாம் நமது முயற்சியை கைவிட்டு விடப்போவது போல நாம் உணரும் பொழுது, நமக்காக இயேசு பட்ட பாடுகளை மட்டும் நினைவு கூராமல், அவரை முகமுகமாக தரிசிக்கும் நாள் வரை, நம்முடைய உபத்திரவங்களை, வெற்றிகரமாக கடந்து செல்ல, அவர் இப்பொழுது நமக்கு உதவி செய்வதையும் நினைவு கூர இது ஒரு வழிகாட்டும் அடையாளமாக உள்ளது.