தொலைபேசி, மின்னஞ்சல், கைபேசி போன்ற செய்தி தொடர்பு கருவிகள் வரும் காலத்திற்கு முன்பு தந்தி மூலம்தான் விரைவாக செய்திகள் பரிமாறிக்கொள்ளப்பட்டுவந்தன. ஆனால் மிகவும் முக்கியமான செய்திகள் மட்டும் தந்தி மூலம் அனுப்பப்பட்டன. அவைகள் பொதுவாக துக்ககரமான செய்திகளாகத்தான் இருக்கும். ஆகவே “தந்திச் சேவகன் எப்பொழுதும் துக்க செய்தியையே கொண்டுவருவான்” என்று பொதுவாகப் பேசப்பட்டு வந்தது.
பழைய ஏற்பாட்டு நாட்களில் எசேக்கியா யூதாவிற்கு அரசனாக இருந்த பொழுது இஸ்ரவேல் நாட்டில் யுத்தம் நடந்து கொண்டிருந்தது. அசீரிய மன்னன் சனகரிப் யூதா தேசத்தில் படையெடுத்து வந்து அநேக நகரங்களை பிடித்துக் கொண்டான். பின்பு அவன் கெட்ட செய்தியைக் கொண்டுவரும் ‘தந்தி’யைப் போல் எசேக்கிய அரசன் சரணடைய வேண்டுமென்று அவனை நிர்ப்பந்தித்து ஒரு கடிதம் அனுப்பினான்.
எசேக்கியா அந்த நாட்களை “இந்த நாள் நெருக்கமும் கண்டிதமும் தூஷணமும் அநுபவிக்கிற நாள்” (2 இரா 19:3) என்று விவரித்திருந்தான்.
ஏளனமாகவும், பழித்தும் பேசி சனகரிப் அவனது முந்தைய படையெடுப்பின் வெற்றிகளைப்பற்றியும், இஸ்ரவேலின் தேவனைப் பற்றியும் அவமதிப்பாகப் கூறி பயங்கரமான அழிவு வர இருக்கிறதென்று கூறினான் (வச.11-13). அந்த நெருக்கடியான நேரத்தில் கெட்ட செய்தியைக் கொண்டுவந்த சனகரிப்பின் கடிதத்தை வழக்கத்திற்கு மாறான முறையில் “அவன் கர்த்தரின் ஆலயத்திற்குப் போய், அதை கர்த்தருக்கு முன்பாக விரித்துவைத்தான்” (வச.14). பின்பு இருள் சூழ்ந்த அந்த நேரத்தில் கிரியை செய்ய தேவன் வல்லமை உடையவர் என்று அவருடைய வல்லமையை அறிக்கையிட்டான் (வச.15-19). தேவன் வல்லமையாக இடைப்பட்டார் (வச.35-36).
துக்க செய்திகள் எந்த நேரத்திலும் நமக்கு வரலாம் அப்படிப்பட்ட நேரங்களில் எசேக்சியா செய்தகாரியம் நமக்கு மிகவும் சிறந்த உதாரணமாகும். அந்த துக்க செய்திகளை தேவனுக்கு முன்பாக வைத்து ஊக்கமாக ஜெபித்து “நீ என்னை நோக்கி பண்ணின விண்ணப்பத்தைக் கேட்டேன்” (வச.20) என்ற நம்பிக்கையூட்டும் அவருடைய வார்த்தைகளைக் கேட்க வேண்டும்.