புகழ் மிக்க மனிதன் என்பவன் தன் வாழ்நாள் முழுவதும் தான் புகழ் அடைவதற்காக கடினமாக உழைத்து, பின் பிறர் தன்னை கண்டுபிடிப்பதைத் தவிர்க்க கருப்புக் கண்ணாடியை அணிந்து கொள்பவன் என்று நகைச் சுவை நடிகர் ஃப்ரெட் ஆலன் கூறியுள்ளார். புகழ் பெற்றவர்கள் மீது ரசிகர்கள் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்வதால் தனிமையை அவர்கள் இழந்து போகிறார்கள்.

பொது இடங்களில் இயேசு போதிக்கும், குணமாக்கும் தம் ஊழியத்தைத் துவங்கிய பொழுது, பொது மக்கள் அவரையே சூழ்ந்து கொண்டு அவரின் உதவியை நாடி நின்றார்கள். எங்கு சென்றாலும் ஒரு பெருங்கூட்டம் அவரைத் தொடர்ந்து பின் சென்றது. தேவையான பலத்தையும், புரிந்து கொள்ளுதலைப் பெறவும் தொடர்ந்து தனிமையில் தேவனோடு தனித்திருக்க வேண்டும் என்பதை இயேசு நன்கு அறிந்திருந்தார்.

இயேசுவின் பன்னிரெண்டு சீடர்களும் “தேவனுடைய இராஜ்யத்தைப் பிரசங்கித்து, பிணியாளிகளைச் சொஸ்தமாக்கித்” தங்கள் சுவசேஷப் பணியை வெற்றிகரமாக முடித்துத் திரும்பி வந்த பொழுது, அவர்களைக் கூட்டிக்கொண்டு இயேசு தனிமையான ஓர் இடத்திற்குப் போனார் (லூக்கா 9: 2, 10).

ஆனாலும் மக்கள் கூட்டம் அதை அறிந்து அவரிடம் போனார்கள். அவர்களை அவர் ஏற்றுக்கொண்டு, தேவனுடைய இராஜ்யத்தை குறித்து அவர்களோடே பேசி, சொஸ்தமடைய வேண்டுமென்றிருக்கிறவர்களைச் சொஸ்தப்படுத்தினார் (வச. 11). ஜனங்கள் தங்கள் போஜனபதார்த்தங்களைச் சம்பாதித்துக் கொள்ளும்படி அனுப்பிவிடாமல் தேவன் 5000 பேருக்கு வனபோஜனம் கொடுத்தார் (வச. 12-17).

ஆவலுடனும், புண்பட்ட மனதுடனும் தம்மண்டை வந்த மக்களின் வேதனையை உணராதவர் இயேசு அல்ல. ஆனால், மக்களுக்கு சேவை செய்வதையும், ஓய்வு எடுக்கவும் தனிமையாக இருந்து பிதாவிடம் தனித்து ஜெபம் செய்வதிலும் சமநிலைப் பிரமாணத்தைக் கைக்கொண்டார் (லூக்கா 5: 16).

தேவனுடைய இப்படிப்பட்ட முன்மாதிரியைக் கைக்கொண்டு அவருடைய நாமத்தில் பிறருக்கு சேவை செய்வோம்.