என் நண்பன் பாப் அவனுடைய மகனின் திருமணவரவேற்பு நிகழ்ச்சியின் பொழுது புது மணத்தம்பதியினருக்கு பல ஆலோசனைகளையும், ஊக்கத்தையும் வழங்கினார். அவர் அவ்வாறு பேசும் பொழுது தன்னுடைய நகருக்கு அருகாமையிலுள்ள கால்பந்து பயிற்சியாளரைப்பற்றி குறிப்பிட்டுப் பேசினார். அந்த பயிற்சியாளர் தன்னுடைய அணி தோல்வியுற்ற பொழுது, தோல்வியுற்றதற்கான மதிப்பீடுகள் குறிப்பிட்டுள்ள பலகையை, தோல்வியுற்றவர்கள் தங்கள் தோல்வியை நினைவுகூரும்படி ஓர் வாரம் முழுவதும் பார்வைக்கு வைத்திருந்தார். இது கால்பந்து விளையாட்டிற்கு வேண்டுமானால் சிறந்த தந்திரமாக இருக்கலாம், ஆனால் திருமண விஷயத்தில் அது பயங்கரமான தந்திரம் என்று கூறி ஞானமான ஆலோசனையை பாப் கூறினார். உங்களுடைய வாழ்க்தைத் துணை உங்களை வருத்தப்படுத்தினாலோ அல்லது ஓர் வகையில் தவறு செய்தாலோ அந்தத் தவறை சுட்டிக் காட்டிக்கொண்டே இருக்கிறீர்களா? மதிப்பீடு குறிக்கும் பலகையை திருப்பிப் போட்டு விடுங்கள்.
என்ன சிறந்த ஆலோசனை! ஒருவருக்கொருவர் அன்பு கூரவும், குற்றங்களைப் பெரிதுபடுத்தாதவாறு அவற்றை விட்டுவிடவும் வேதம் முழுவதும் அநேகக் கட்டளைகளை நாம் பார்க்கிறோம். அன்பு தீங்கு நினையாது (1கொரி 13: 5) என்று நாம் வாசிக்கிறோம். “கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களை மன்னித்தது போல” நாமும் ஒருவரை ஒருவர் மன்னிப்பதற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும் (எபேசியர் 4:32).
நான் தவறு செய்யும் பொழுது, தேவன் மதிப்பீடு குறிக்கும் பலகையை திருப்பிப் போட்டுவிடுகிறார். ஆகையால் அவருக்கு அதிக நன்றி பாராட்டுகிறேன். மேற்கிற்கும், கிழக்கிற்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார்” (சங் 103:12). தேவனுடைய மன்னிப்பு என்பது நம்முடைய பாவங்கள் அவர் பார்வையிலிருந்தும், அவர் மனதிலிருந்தும் அகற்றப்பட்டு விட்டான என்று சொல்லும். இப்படிப்பட்ட மன்னிப்பை நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு கூட்டி வழங்க தேவன் நமக்கு கிருபை பாராட்டுவாராக.