உங்களுக்கும் எனக்கும் இடையே சில பொதுவான காரியங்கள் இருக்கும். குழப்பமிக்க, தெளிவற்ற உலகத்தைத் தவிர வேறு விதமான ஓர் உலகத்தையும் நாம் அறிவோம். இப்பூமி சபிக்கப்படுவதற்கு முன் தங்கள் வாழ்க்கை எப்படி இருந்தது என்று ஆதாமும், ஏவாளும் நன்கு அறிந்திருந்தனர். மரணமில்லாத, கடின உழைப்பற்ற, வேதனையற்ற ஓர் உலகமாக இருக்க வேண்டும் என்று தேவன் விரும்பியதையும் அவர்கள் அறிந்திருந்தார்கள். (ஆதி 3:16-19) பாவத்தினால் உலகம் வீழ்ச்சியடையுமுன் பசி, வேலையில்லாத் திண்டாட்டம், வியாதிகள் இருந்ததில்லை. தேவனுடைய சிருஷ்டிப்பின் வல்லமையையோ அல்லது மனிதனுக்கு, தேவனுக்கும் உள்ள உறவின் திட்டத்தையோ யாரும் சந்தேகிக்கவில்லை.

நாம் சுதந்தரித்துள்ள இந்த உலகம் கறைதிரையற்ற தேவனுடைய தோட்டத்தின் சாயலிளிருந்து இன்று சற்று குறைவுபட்டு காணப்படுகிறது. “தவறான பாதையில் சென்றுள்ள இவ்வுலகம் ஓர் நல்ல உலகம். இவ்வுலகிற்குத் தான் எவ்வாறு இருந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் இன்றும் அதில் நிறைந்திருக்கத்தான் செய்கிறது” என்று C.P. லூயி கூறுகிறார். அதிர்ஷ்டவசமாக பூமி எவ்வாறு இருந்திருக்க வேண்டும் என்ற இந்த மங்கலான சிந்தனையானது நித்தியத்தைப் பற்றிய ஓர் தீர்க்கத்தரிசன கண்ணோட்டத்தையும் கொடுக்கிறது. ஏதேன் தோட்டத்தில் ஆதாமும், ஏவாளும் தேவனோடு நடந்து உறவாடினது போல, விசுவாசிகள் நேரடியாக அவர் முகத்தை தரிசித்து பணிவிடை செய்வார்கள். நமக்கும், தேவனுக்கும் இடையே எந்த வித இடர்ப்பாடும் கிடையாது. “இனி ஒரு சாபமுமிராது” (வெளி 22: 3). அங்கு பாவமோ, பயமோ, அவமானமோ இராது.

இன்றைய நிலையில் கடந்தகால சாபமும், அதன் விளைவுகளும் ஓர் நிழலாட்டமான தோற்றத்தை ஏற்படுத்தலாம். ஆனால் ஓர் விசுவாசி நன்மையான வாக்குத்தத்தத்தைப் பற்றிக் கொண்டு – ஏதேனைப் போல கறை திரையற்ற ஸ்தலத்தில் வாழுவதையே தன் குறிக்கோளாகக் கொண்டுள்ளான்.