நானும், என் கணவரும் வெவ்வேறு முறைகளில் வேதத்தை வாசிப்போம். ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாக டாம் கற்றிருந்தான். ஒவ்வொரு வார்த்தையாக நிறுத்தி மெதுவாக வாசிக்கும் பழக்கமுடையவர். நான் மேலோட்டமாக, மிகவேகமாக வாசித்து விடுவேன். ஆனால் என் கணவர் என்னை விட வசனங்களை மிக ஆழமாக வாசித்து, வாசிப்பதைத் தன் மனதில் ஞாபகம் வைத்துக் கொள்வார். ஒரு வாரத்திற்கு முன்னால் வாசித்ததைக் கூட ஞாபகப்படுத்தி மேற்கோள் காட்டுவார். நான் ஓர் புத்தகத்தை அல்லது திரையில் சிலவற்றை வாசித்து முடித்த அந்த நிமிடமே வாசித்தது என் ஞாபகத்திற்கு வராமல் மறந்து போய்விடும்.
வேதத்தை வாசிக்கும் பொழுதும் இப்படி மேலெழுந்த வாரியாக வாசிப்பது ஓர் பிரச்சனையாக இருக்கும் – வம்ச வரலாறுகளை வாசிக்கும் போது மாத்திரம் அல்ல எனக்கு மிகவும் பரிச்சயமான பகுதிகளை வாசிப்பதை விட்டுவிட தூண்டப்படுவேன். சிறு பிள்ளையிலிருந்தே கேட்ட கதைகள் அல்லது சங்கீதங்களை நமக்குத் தெரிந்ததுதானே என்று வாசிக்காமல் விட்டுவிடுவேன்.
மிகவும் கவனமாக, வசனங்களை விளங்கிக் கொள்ளும் விதத்தில் வாசித்து தேவனை சிறந்த முறையில் அறிந்து கொள்ள முயற்சி எடுக்க வேண்டும் என்று நீதிமொழிகள் 2ம் அதிகாரம் நம்மை ஊக்குவிக்கிறது. நேரம் செலவழித்து வேதத்தை மிகவும் கவனமாக மனப்பாடம் செய்தால்தான் அதில் காணப்படும் ஆழமான சத்தியத்தை நாம் கிரகித்துக் கொள்ள முடியும் (வசனங்கள் 1-2). சில சமயங்களில் வேதத்தை உரத்த சத்தத்துடன் வாசிக்கும் பொழுது அது நம் செவியில் விழுந்தால், தேவனுடைய ஞானத்தை முற்றிலும் அறிந்து கொள்ள முடியும். நாம் ஜெபிக்கும் பொழுது வேத வசனங்களை தேவனிடம் கூறி புத்தியையும், ஞானத்தையும் தர வேண்டும் என்று கெஞ்சும் பொழுது, அவற்றை எழுதிய ஆவியானவரிடம் நாம் உரையாடுவதை அனுபவித்து மகிழலாம்.
நாம் நம் முழு இருதயத்தோடு தேவனையும், அவருடைய ஞானத்தையும் தேடும் பொழுது அதைக் கண்டடையலாம். ஞானத்தை வெள்ளியைப் போல் நாடி, புதையல்களைத் தேடுகிறது போல தேடுவோமானால், அதைக் கண்டடையலாம்.