பள்ளிக்கூட உணவறையில், தான் சந்திக்கும் பிரச்சனையைக் குறித்து என் மகள் கூறினவுடன் அப்பிரச்சனையை எப்படி சரி செய்வது என எண்ணி வியந்தேன். ஆனால் அடுத்ததாக இன்னொரு எண்ணமும் தோன்றியது. ஒருவேளை அவள் தேவன் கிரியை செய்வதைக் கண்டு அவரை இன்னும் அதிகமாய் அறிந்து கொள்ளும்படியாய் இந்தப்பிரச்சனையை அனுமதித்தாரோ என தோன்றியது. ஆகவே உடனடியாக அப்பிரச்சனையிலிருந்து அவளை விடுவிக்க முயல்வதை விட்டு, அவளோடு சேர்ந்து ஜெபிக்க தீர்மானித்தேன். என்னுடைய உதவியின்றி அப்பிரச்சனை விலகிற்று!
இச்சம்பவத்தின் மூலம் தேவன் தன் மேல் கருத்தாய் இருக்கிறார் என்றும், தன்னுடைய ஜெபங்களை கவனித்துக் கேட்கிறார் என்றும், ஜெபங்களுக்கு பதில் கொடுக்கிறார் என்பதையும் என் சிறு மகள் அறிந்து கொண்டாள். இப்பாடங்களை இளம் வயதிலேயே கற்றுக்கொள்ள வேண்டியதின் முக்கியத்துவத்தை வேதாகமம் கூறுகிறது. “பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்” (நீதிமொழிகள் 22:6). இயேசு கிறிஸ்துவையும் அவருடைய வல்லமையையும் குறித்த அறிவை சிறு வயது முதலே நம்முடைய பிள்ளைகளுக்கு வெளிப்படுத்தினால், ஒருவேளை அவர்கள் இயேசுவை விட்டு தூரம் சென்றாலும் மறுபடி திரும்பவும், தன் வாழ்நாள் முழுவதும் ஆவிக்குரிய வாழ்வில் வளரவும் அடித்தளம் போடுகிறோம்.
சிறு பிள்ளைக்குள் விசுவாசத்தை வளர்க்கவேண்டுமானால், இயற்கையிலுள்ள தேவனுடைய வடிவமைப்பை சுட்டிக்காட்டுங்கள். அவர் உங்களுக்கு செய்த உதவிகளை கதையாகக் கூறுங்கள், அல்லது நீங்கள் ஏதாவது நன்மையை பெறும் பொழுது, பிள்ளையை அழைத்து ஒன்று சேர்ந்து தேவனுக்கு நன்றி செலுத்துங்கள். தேவன் உங்கள் மூலமாய், அவருடைய நன்மைகளை இனி வருகிற சந்ததியாருக்கு வெளிப்படுத்தும்படி கிரியை செய்ய முடியும்.