ஓர் உயர்ந்த மலையின் நிழலில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் ஓடும் ஓடையின் ஓரத்தில் என் வீடு உள்ளது. வசந்தகாலங்களில் பனி உருகுவதாலும் இந்த கனமழை பெய்வதாலும் ஒடையில் நீர்வரத்து பெருகி நதியைப் போல காட்சியளிக்கும். அநேகர் அதில் மூழ்கியும் போயிருக்கிறார்கள். ஒரு நாள் இந்த ஒடையின் துவக்கத்தை கண்டறிய விரும்பி ஆராய்ந்த பொழுது, அது ஒரு மலையின் மேலுள்ள பரந்து விரிந்த பனிநிலங்களில் இருந்து துவங்குகிறது என கண்டறிந்தேன். இந்த பனி நிலங்களிலிருந்து பனி உருகி, நீண்ட பயணமாய் அநேக சிற்றோடைகளோடு இணைந்து, பின்பு இந்த ஓடையாய் மாறுகிறது.

ஜெபத்தைக் குறித்து சிந்தித்த பொழுது, அநேகந்தரம் நாம் தவறான திசையிலே பயணிக்கிறோம் என்பதை உணர்ந்தேன். நான் ஜெபிக்கும் பொழுது, கீழ்நிலையிலிருந்து என் கவலைகளை தேவனிடம் கொண்டு செல்வேன். தேவன் அதை அறியார் என்பது போல அவற்றை அவருக்கு தெரிவிப்பேன். ஏதோ தேவன் தயங்குவது போலவும், அவர் மனதை மாற்றும்படியாகவும், அவரிடம் கெஞ்சிமன்றாடுவேன். ஆனால் நான் செய்ய வேண்டியதோ, நீரோடை பிறக்கும் மேலிடத்திலிருந்து ஜெபிக்க வேண்டும்.

நாம் பயணிக்கும் திசையை, கண்ணோட்டத்தை மாற்றும் பொழுது, தேவன் நமது தேவைகள் மேல் ஏற்கனவே கரிசனை உள்ளவராய் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்வோம். அது நமது அன்புக்குரியவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும், பிரிந்த குடும்பமாய் இருந்தாலும், அல்லது முரட்டாட்டமான பிள்ளையாக இருந்தாலும், நம்மைவிட அவர் நம்மேல் கரிசனையுள்ளவராய் இருக்கிறார். நம்முடைய தேவைகள் அனைத்தையும் நம் தேவன் அறிந்திருக்கிறார். (மத் 6:8)

கிருபையும், தண்ணீரைப் போல தாழ்வான நிலைகளுக்கு சென்றடைகின்றது. இரக்கத்தின் நீருற்றுகள் பாய்கின்றன. நாம் தேவனிடமிருந்து துவங்க வேண்டும். முதலாவது இந்த பூமியில் அவருடைய கிரியை நம்மில் வெளிப்பட நம்முடைய பங்கு என்ன என்பதை அவரிடம் கேட்டு அறிந்துக்கொள்ள வேண்டும். இப்படிபட்ட ஜெபத்தின் ஆரம்பம் நமது கண்ணோட்டத்தையே மாற்றும். இயற்கையைக் காணும்பொழுது, அதில் பரம கலைஞரின் கைவண்ணத்தைக் காணலாம். மனுஷனைக் காணும்போது, தேவசாயலில் சிருஷ்டிக்கப்பட்ட நித்தியத்தை தன்னுள் கொண்ட தனி மனிதனைக் காணலாம். அப்பொழுது, துதியும். ஸ்தோத்திரமும் தாமாகவே நம்மிலிருந்து புறப்படுகிறது.