இங்கிலாந்து தேசத்தின், லண்டன் மாநகரிலுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் என்னும் இடத்தில் பிக் பென் (Big Ben) என்று அழைக்கப்படும் கடிகாரத்தையுடைய கடிகார கோபுரம் மிக பிரசித்திபெற்ற ஒரு சின்னமாகும். ஹண்டெல் மேசியா (Handel’s Messiah) என்னும் தொகுப்பிலிருந்து, “என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்று நான் அறிவேன்” என்ற மெட்டினை தழுவிய ராகத்தையே அந்த கடிகாரம் ஒலிப்பதாக பாரம்பரியமாக எண்ணப்படுகிறது. பின்பு, இந்த ராகத்தோடு இவ்வார்த்தைகளும் சேர்க்கப்பட்டு கடிகார அறையில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது: “தேவனே, இந்த மணி வேளையும் எங்கள் வழிகாட்டியாய் இருந்தருளும்; ஏனெனில் உம்முடைய வல்லமையால் ஒரு காலும் இடறுவதில்லை.”
இவ்வார்த்தைகள், சங்கீதம் 37 ஆம் அதிகாரத்தோடு ஒத்து உள்ளது: “நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார். அவன் விழுந்தாலும் தள்ளுண்டுபோவதில்லை; கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார். (வச. 23,24) தேவன் தமது பிள்ளைகளின் அனுபவங்களில் எவ்வளவு நெருக்கமாயிருக்கிறார் என்பதைக் கவனியுங்கள்: “அவனுடைய வழியின் மேல் அவர் பிரியமாயிருக்கிறார்” (வச 23). மேலும், வசனம் 31, “அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது; அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை” எனக் கூறுகிறது.
அண்ட சராசரங்களையும் படைத்தவர் நம்மைத் தாங்குவதும், உதவி செய்வதுமட்டுமின்றி, நாம் வாழும் ஒவ்வொரு கணமும் நம்மேல் ஆழ்ந்த அக்கறை உள்ளவராய் இருக்கிறார். இது எவ்வளவு ஆச்சரியமான ஒன்று! ஆகவே பேதுரு, “அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்” (1 பேது 5:7) என்று திடநம்பிக்கையோடு நம்மை அழைப்பதைக் கண்டு நாம் வியக்கத் தேவையில்லை. அவருடைய அரவணைப்பின் வாக்குறுதி நம்முடைய இருதயங்களில் ஒலிக்கும் பொழுது, நம் வாழ்வில் வரும் எல்லாவற்றையும் எதிர்கொள்ள நமக்கு பெலனுண்டு.